IPL 2024 | Mumbai Indians | Lucknow Super Giants: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: MI vs LSG Live Score, IPL 2024
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணியில், தொடக்க ஆட்டக்காரரான படிக்கல் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டொயினிஸ் 22 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 28 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த ஹூடா 11 ரன்களில் அவுட் ஆனார். இதனால் லக்னோ அணி 69 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் கே.எல்.ராகுல், - பூரன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. ராகுல் ஒருபுறம் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் மறுமுனையில் பூரன் அதிரடியாக சிக்சர் பவுண்டரிகள் விளாசினர். இதனால் லக்னோ அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில், 19 பந்துகளில் பூரன் அரைசதம் கடந்து அசத்தினார்.
அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் விளையாடிய ராகுல் 41 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய பூரன் 29 பந்துகளில் 5 பவுண்டரி 8 சிக்சருடன் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் அசத்திய பதோனி 10 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 22 ரன்களும், குணால் பாண்டியா 7 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணி தரப்பில், துஷாரா, பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பும்ராவுக்கு பதிலாக களமிறங்கிய டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், விக்கெட் வீழ்த்தாத நிலையில், 2.2 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
215 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி நிதானமாக விளையாடிய நிலையில், தொடக்க வீரரான ப்ரவிஜ் 20 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், 3 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் கணக்கை தொடங்காமலே பெவிலியன் திரும்பினார். இதனால் மும்பை அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாட முயற்சித்தார்.
13 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, அரைசதம் கடந்த நிலையில், 38 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வாதரோ ஒரு ரன்னில் வெளியேறினார்.
கடைசி 2 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்படடது. இஷான் கிஷன், நமன் தார் களத்தில் இருந்தனர். 19-வது ஓவரில் நமன் தார் 2 சிக்சர்கள் அடிக்க அந்த ஓவரில் 18 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த நமன் தார் அரைசதம் கடந்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க 3-வது பந்தில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார்.
அடுத்து 3 பந்தில் ஒரு சிக்சருடன் 7 ரன்கள் எடுத்த மும்பை அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட மும்பை அணி தனது கடைசி லீக் போட்டியில் வெற்றியுடன் வெளியேறும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.