IPL 2023, Mumbai vs Bangalore Live Score in Tamil: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கிய ஆட்டத்தில் 54வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்யும்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (வ), வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.
மும்பை இந்தியன்ஸ்:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
ஐ.பி.எல் 16-வது சீசனில் 54வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது.
பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளெசிஸ், விராட் கோலி களமிறங்கினர். 4 பந்தில் 1 ரன் எடுத்திருந்த விராட் கோலி முதல் ஓவரிலேயே அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த அனுஜ் ராவத் 6 ரன்னில் அவுட் ஆனார். இதனால், பெங்களூரு 2.2 ஓவரில் 16 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து, களமிறங்கிய மேக்ஸ்வெல் கேப்டன் டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் உள்பட 68 ரன்கள் குவித்த மேக்ஸ்வேல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய லுமூர் 1 ரன்னில் அவுட் ஆனார்.
ஆனால், மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் டு பிளசிஸ் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 30 ரன் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. கேதார் ஜாதவ் 12 ரன்களுடனும், ஹசரங்கா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மும்பை அணியின் ஜேசன் பெஹ்ரெட்ன்ரொப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் பேட்டர்கள் களம் இறங்கினர். மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்னில் ஹசரங்கா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் (42 ரன்கள், 21 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ஹசரங்கா அவுட் ஆனார். மும்பை அணி அப்போது, 5 ஓவர்களுக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து, மும்பை அணியில், நேஹல் வதேரா, சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் அதிரடி காட்ட, மறுமுனையில் வதேராவும் சிறப்பாக விளையாடினார். இருவரும் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 26 பந்துகளில் அரைசதத்தை எட்டிய சூர்யகுமார் யாதவ் 83 ரன்னில் (35 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) விஜய்குமார் வைஷாக் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த சீசனில் 4-வது அரைசதம் அடித்த சூர்யகுமார் ஐ.பி.எல். போட்டியில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அடுத்து வந்த டிம் டேவிட் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். நேஹல் வதேரா சிக்சர் விளாசி அணி வெற்றி இலக்கை அடையச் செய்து, தனது 2-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணீ 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேஹல் வதேரா 52 ரன்னுடனும் (34 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேமரூன் கிரீன் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
பெங்களூரு அணி தரப்பில் ஹசரங்கா, விஜய்குமார் வைஷாக் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த ஐ.பி.எல் தொடரில் 11-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 6-வது வெற்றியை பெற்றுள்ளது. முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவிடம் தோல்வி அடைந்ததற்கு இந்த போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.