Mumbai Indians | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டங்களில் 3 வெற்றி, 6 தோல்விகளை அடைந்து புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
அடுத்தடுத்த தோல்விகளால் தள்ளாடி வரும் மும்பை அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்குள் செல்வதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது என்றே கூறலாம். இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று, பிற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுகளை வைத்தே அந்த அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Michael Clarke says there are different groups inside Mumbai Indians changing room
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி யின் மோசமான ஆட்டம் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ட்ரெஸ்ஸிங் ரூமில் அணி பிளவுபட்டுள்ளது என்றும் அவர்கள் குழுவாக செயல்படவில்லை என்றும் அப்பட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மைக்கேல் கிளார்க் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசுகையில், "மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்குள் செல்லும் என நான் நினைக்கவில்லை. இந்த ஐ.பி.எல். தொடர் முழுவதும் மும்பைக்கு இது ஆசையாக இருக்கும் என்று நினைக்கிறேன். களத்தில் நாம் பார்ப்பதை விட இன்னும் நிறைய விஷயங்கள் மும்பை அணிக்குள் நடந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இவ்வளவு சிறப்பான வீரர்களை வைத்துக்கொண்டு இதுபோன்று நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியாது.
மும்பை அணி பிளவுபட்டுள்ளது என நினைக்கிறேன். மும்பை அணிக்குள் வெவ்வேறு குழுக்கள் உருவாகியிருக்கலாம். அணியில் ஏதோ ஒன்று சரியில்லை. அவர்கள் குழுவாக செயல்படவில்லை. ஒரு அணியாக விளையாடவில்லை. ஐ.பி.எல். போன்ற மிகப்பெரிய தொடர்களை வெல்ல நீங்கள் அணியாக செயல்படவேண்டும். தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடக்கூடாது. துரதிஷ்டவசமாக மும்பை அணியாக விளையாடவில்லை. அவர்கள் விரைவாக வெற்றிமுகத்திற்கு திரும்புவார்கள் என நம்புகிறேன். ஆனால், ஐ.பி.எல். கோப்பையை மும்பை வெல்லும் என்று நினைக்கவில்லை" என்று அவர் கூறினார்.
இன்று செவ்வாய்க்கிழமை லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் 48வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“