9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
இதில், இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு டிரினிடாட் தாரூபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடந்த முதல் அரைஇறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
இந்த நிலையில், இந்திய அணிக்கு மட்டும் சாதகமாகவும் மற்ற அணிகளுக்கு அநீதி இழைப்பதாகவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.
அதாவது, தென் ஆப்ரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது கயானா நகரில் நடைபெற்றிருக்க வேண்டும் என்றும், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரையிறுதி டிரினிடாட் நகரில் நடைபெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இதை தட்டிக் கேட்க வேண்டிய ஐ.சி.சி-யே மொத்த உலகக் கோப்பையையும் இந்தியாவுக்கு சாதகமாக நடத்தி மற்ற அணிகளுக்கு அநியாயத்தை செய்துள்ளதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக அதிகாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா விளையாடினால் அதை பெரும்பாலான இந்திய ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். அதனால், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றால் அப்போட்டி கயானாவில் தான் நடைபெறும் என்று ஐ.சி.சி அறிவித்திருந்தது.
இது குறித்து மைக்கேல் வாகன், தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த அரையிறுதி போட்டி கண்டிப்பாக கயானாவில் நடந்திருக்க வேண்டும். ஆனால், இந்த மொத்த தொடருமே இந்தியாவை நோக்கி நடத்தப்படுவதால் அது மற்ற அணிகளுக்கு அநியாயத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“