நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், தமிழக வீரர் லட்சுமணன் கோவிந்தன், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற நிலையிலும், ரன்னிங் போது டிராக் மாறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவு அளித்த மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ரூ.10 லட்சம் பரிசு அளித்து உற்சாகப்படுத்தினார்.
இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த ஆக.3ம் தேதி நடந்து முடிந்தது. இதில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர், வீராங்கனைகள் 15 தங்கம், 19 வெள்ளி உள்ளிட்ட 69 பதக்கங்களை வென்று நாடு திரும்பினார்கள். ஒரு போட்டித் தொடரில் இந்திய அணி குழுவாக வென்ற அதிக எண்ணிக்கை கொண்ட பதக்கங்கள் இது தான்.
இதில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லியில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. தங்கம் வென்றவர்களுக்கு ரூ.40 லட்சம், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.20 லட்சம், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு அளிக்கப்பட்டது.
இதில் தமிழகத்தில் இருந்து தடகள வீரர் லட்சுமணன் கோவிந்தன் 10ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார். இதில் லட்சுமணன் 29:44:91 வினாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். லட்சுமணனுக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்பட்டது.
ஆனால், ரீப்ளேயில், லட்சுமணன் ஓடும்போது, அவரது டிராக்கில் இருந்து மாறி, மற்றொரு டிராக்கிற்கு சென்று மீண்டும் அவரது டிராக்கில் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சர்வதேச தடகள விதிமுறைப்படி, டிராக்கை விட்டு விலகி ஓடிய காரணத்துக்காக லட்சுமணனிடம் இருந்து வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக வீரர் லட்சுமணன் கோவிந்தனுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், லட்சுமணனுக்கு ரூ.10 லட்சம் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பரிசாக அளித்தார்.
அதன்பின் அமைச்சர் தனது ட்வீட்டில், "ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் லட்சுமணன் கோவிந்தன் வெண்கலப் பதக்கம் வென்ற போதிலும், சில தொழில்நுட்ப காரணங்களால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு பதக்கத்தை இழந்தார். இருந்தாலும், லட்சுமணன்தான் நம்நாட்டின் சாம்பியன். நாம் அவருக்குத் துணையாக இருந்து, ஆதரவு அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை ஆசியவிளையாட்டுப்போட்டியில் தமிழக வீரர் லட்சுமணன் கோவிந்தன் தகுதிநீக்கம் செய்யப்படாமல் இருந்திருந்தால், ஆசியப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப்பின் பதக்கம் வென்ற வீரர் எனும் பெருமையைப் பெற்றிருப்பார். கடைசியாக 1998-ம் ஆண்டு பாங்காக் ஆசியப் போட்டியில், இந்திய வீரர் குலாப் சந்த் கடைசியாகப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.