தமிழ்நாடு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்டிரேட் (ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீடு ஆணையம் - Australian Trade and Investment Commission) மத்திய விளையாட்டு மற்றும் அறிவியல் மையத்துடன் (சிஎஸ்எஸ்) இணைந்து இப்போட்டியை நடத்துகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் தூதுக்குழு மற்றும் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருந்தினர்களுக்கு இடையேயான இந்த நட்பு கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 24ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பிளாக்டவுண் நகர மேயர் ஸ்டீபன் பாலி தலைமையிலான அணி பங்கு கொள்கிறது. இதில், ஆஸ்திரேலியா நியூஸ் சவுத் வேல்ஸின் முன்னாள் பிரதமர் நாதன் ரீஸ் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
15 பேர் கொண்ட இந்திய அணியில் திரைப்பட இயக்குனர் பரத் பாலா, எம்ஆர்எஃப் இயக்குனர் மம்மென், முருகப்பா குழுமத் தலைவர் அனந்தசேஷன் நாராயணன், ஒலிம்பிக் பதக்கம் வென்ற ககன் நரங் மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போட்டி ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (SRIHER) நடைபெற உள்ளது.