ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், "அனைத்தும் முடிந்துவிட்டது. நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன். கடைசி விக்கெட்டையும் எடுத்துவிட்டேன். இன்று முதல் எல்லா விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுகிறேன். அடுத்த வருடம் வரை டி20 தொடர்களில் விளையாட முடியும் என்று மனதளவில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் எனது உடம்பு அதற்கு ஒத்துழைக்கவில்லை. ஒருவேளை அப்படி விளையாடி 100 சதவிகிதம் அணிக்கு ஒத்துழைப்பு தரமுடியவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பிரட் லீ-க்கு பிறகு வேகத்தில் மிரட்டிய பவுலர் என்றால் அதில் மிட்சல் ஜான்சனுக்கு தான் முதலிடம். அவரது வேகத்தில் எதிரணி வீரர்கள் நிலைகுலைந்து போன சம்பவங்கள் பல உள்ளன.
இந்தியாவுக்கு எதிராக விளையாடிய பல கிரிக்கெட் வீரர்களில் நாம் மிகவும் வெறுத்த மிகச் சில பவுலர்களில் ஒருவர் ஜான்சன். தனிப்பட்ட குணாதிசயங்களை கண்டு அல்ல.. பவுலிங்கை கண்டு அஞ்சி வெறுத்த தருணங்கள் அது!! ஆஷஸ் போட்டியில் இவர் பீட்டர்சனுக்கும், ஜொனாதன் டிராட்டுக்கும் வீசிய பவுன்சர் பந்துகளை கண்டு Enchanted-ஆன மூளை செல்கள் சகஜ நிலைக்கு திரும்ப வெகு நாட்கள் ஆனது.
இவரைப் போன்ற பவுலிங் கோச் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் நாடுகளுக்கு தேவை. குறிப்பாக இந்தியாவுக்கு.
தகவமைத்துக் கொள்ளுதலையும் (Adapt), அதை கற்பூரம் போல கப்பென்று பிடித்துக் கொள்ளும் வித்தையையும் இந்திய அணியில் அவர் விதைத்தால் போதும்.... எதிர்கால இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் டெஸ்ட் தொடர்களை வெல்ல வாய்ப்புள்ளது.