இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகலிரவு ஆட்டமாக நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் மிரட்டி எடுத்த ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டை கைப்பற்றினார்.
தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. இரவு உணவு இடைவேளையின் போது, 85 ஓவர்களில் 332 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவை விட 152 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு வரிசை குறித்த கேள்விக்கு, 'நான் இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளர் அல்ல' என்று ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் அதிரடியாக பதிலளித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் ஸ்டார்க் 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். நேற்றைய ஆட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஸ்டார்க், "ஆமாம், பந்து வீச்சுடன் எங்களுக்கு ஒரு நல்ல முதல் நாள். அந்த முதல் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாங்கள் நன்றாக களமிறங்கினோம். எனவே, டெஸ்டைத் தொடங்க இது ஒரு நல்ல வழி.
ஜெய்ஸ்வால் கடந்த வாரம் ஒரு சிறந்த டெஸ்ட் போட்டியை கொண்டிருந்தார். எனவே, அவரை சீக்கிரம் வீழ்த்தியதில் மகிழ்ச்சி. இரண்டாவது இன்னிங்ஸிலும் அவரை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்" என்று கூறினார்.
ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய பந்துவீச்சு வரிசை தங்களது லயன் மற்றும் லெந்தில் தடுமாறினார்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஸ்டார்க், "நான் அவர்களின் பந்துவீச்சு பயிற்சியாளர் அல்ல." என்று அதிரடியான பதிலை கொடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“