worldcup | australia vs srilanka: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லக்னோவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 14-வது லீக்கில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி - இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி பவுலிங் செய்தது. இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக குசல் பெரேரா - பாத்தும் நிஸ்ஸங்க ஜோடி களமிறங்கினர். ஆஸ்திரேலியா தரப்பில் முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் வீசினார்.
முதல் பந்திலேயே யார்க்கர் வீசி மிரட்டினார் ஸ்டார்க். அதனை எப்படியோ தடுத்து நிறுத்தி விளையாடினார் பாத்தும் நிஸ்ஸங்க. ஸ்டார்க் தனது 4வது பந்தை வீச வேகமாக ஓடி வருகையில், எதிர்முனையில் இருந்து குசல் பெரெரா க்ரீஸ் கோட்டில் இருந்து வேகமாக வெளியேறினார். இதைப் பார்த்த ஸ்டார்க் பந்தை வீசாமல் நின்றார். அதோடு, குசல் பெரெராவை கோபத்துடன் முறைத்துப் பார்த்து மன்கட் எச்சரிக்கையைக் கொடுத்தார்.
இந்த சம்பவத்தால் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்ட நிலையில், தொடர்ந்து ஸ்டார்க் வீசிய 5வது ஓவரின் கடைசி பந்திலும் குசல் பெரெரா மீண்டும் க்ரீஸில் இருந்து வெளியேற முயற்சித்தது போல் தெரிந்த நிலையில், ஸ்டார்க் பந்துவீசுவதை நிறுத்தினார். எனினும், குசல் பெரெரா க்ரீஸ் உள்ளே இருந்ததால் அவர் தப்பித்தார். பொதுவாக, மன்கட் முறை ரன் அவுட்-டிற்கு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை அணி 32.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்ட நிலையில், சில நிமிட ஆட்ட நிறுத்தத்திற்கு பிறகு போட்டி மீண்டும் நடந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“