பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் இந்திய கிரிக்கெட்டில் உள்ள சாதி பாகுபாடு குறித்து வெளியான கட்டுரைக்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பிறகு, அறிமுகமான 290 வீரர்களில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியைச் சேர்ந்த நான்கு வீரர்களுக்கு மட்டுமே அணியில் கிடைத்துள்ளது என்று பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டது.
இந்த கட்டுரைக்கு பதிலளிக்கும் விதமாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உங்கள் நிறுவனத்தில், மிக முக்கிய பத்திரிக்கையாளர்களில் எத்தனை பேர் SC அல்லது ST ஆக இருக்கிறார்கள்? அல்லது உங்கள் நிறுவனத்தின் மூத்த ஆசிரியர்களில் எத்தனை பேர் SC அல்லது ST ஆக உள்ளார்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விளையாட்டு என்ற தளத்தில் தான் ஜாதி வேறுபாடுகள் களையப்பட்டு அனைவரும் ஒருங்கே இருக்கின்றோம். ஆனால், இது போன்ற ஊடகங்கள் வெறுப்பை தூண்டுகின்றன" என்றும் கைஃப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த கட்டுரையில் தலித் மற்றும் முஸ்லீம் மதத்தில் இருந்து எத்தனை வீரர்கள் கிரிக்கெட்டில் பங்காற்றி இருக்கிறார்கள் என்பது குறித்தும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நான்கில் மூன்று தலித் இந்திய டெஸ்ட் வீரர்கள், வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக இருந்திருக்கின்றனர் என்றும், இந்த நூற்றாண்டில் அறிமுகமான எட்டு முஸ்லீம் வீரர்களில், ஐந்து பேர் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபிஎல்-ல் 27 முஸ்லீம் பவுலர்களும், 8 முஸ்லீம் ஆல்-ரவுண்டர்களும், 8 முஸ்லீம் பேட்ஸ்மேன்களும் விளையாடியதாக அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.