இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்திய போது, சர்வதேச ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் சாதனையை படைத்தார்.
நேப்பியர் மெக் லீன் மைதானத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய முகமது ஷமி, நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் விக்கெட்டை வீழ்த்தியபோது, சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 100-வது விக்கெட்டை வீழ்த்தினார். தனது 56-வது போட்டியில் 100-வது விக்கெட்டை அவர் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
இதற்கு முன், இர்பான் பதான் 59 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது தான் சாதனையாக இருந்தது. தற்போது ஷமி அதனை முறியடித்துள்ளார். 90’ஸ் கிட்ஸ் ஹீரோ ஜாகீர்கான் 65 போட்டிகளிலும், அஜித் அகர்கர் 67 போட்டிகளிலும், ஜவகல் ஸ்ரீநாத் 68-வது போட்டியிலும் 100 விக்கெட்டுகளை எட்டி இருந்தனர்.
சர்வதேச அளவில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எட்டியதில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 44 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டினார். ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் 53 போட்டிகளிலும், பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக் 53 போட்டிகளிலும், ஷேன் பாண்ட் 54 போட்டிகளிலும், பிரட் லீ 55 போட்டிகளிலும் இச்சாதனையை படைத்திருக்கின்றனர்.
அதேபோல், ஷிகர் தவான் இன்றைய ஆட்டத்தின் போது, 6வது ஓவரில் டிம் சவுதி பந்தை பாயிண்டில் தட்டி விட்டு 1 ரன் எடுத்த போது, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
இந்திய அளவில், விரைவாக 5000 ரன்கள் கடந்தவர்களில், விராட் கோலி 114 இன்னிங்ஸுடன் முதலிடத்தில் உள்ளார். ‘தாதா’ கங்குலி 124 இன்னிங்ஸ்களில் 5000 எட்டினார். தற்போது 118 இன்னிங்ஸில் தவான் 5000 ரன்களை கடந்திருப்பதன் மூலம், கங்குலியின் ரெக்கார்டை உடைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாராவும் 118 இன்னிங்ஸில் இச்சாதனையை படைத்திருந்தார்.
உலக அளவில் தென்னாப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா 101 போட்டிகளில் 5000 ரன்களைக் கடந்து நம்பர்.1 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க – India vs New Zealand Live: இந்தியா vs நியூசிலாந்து லைவ் அப்டேட்ஸ்