ஆசைத் தம்பி
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 14ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அஜின்க்யா ரஹானே தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல், சத்தீஸ்வர் புஜாரா, கருண் நாயர், ரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா, ஷர்துள் தாகுர் ஆகியோர் வாய்ப்பு பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, இந்த டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் யோ – யோ டெஸ்ட்டில் பங்கேற்று அதன் ரிப்போர்ட்டை ஜூன் 8ம் தேதியன்று சமர்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்து இருந்தது.
அதன்படி, இத்தொடருக்கான இந்திய வீரர்கள் யோ-யோ டெஸ்ட்டில் கலந்து கொண்டனர். ஆனால், இதில் முகமது ஷமி தோல்வியடைந்துள்ளார். இதனால் முகமது ஷமி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்குப் பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 25 வயதாகும் சைனி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். 31 முதல்தர போட்டிகளில் 96 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அணியில் இடம்பிடித்துள்ள இவருக்கு ஆடும்லெவனில் இடம்கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
அதுமட்டுமின்றி, அடுத்து நடைபெறவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணியுடன் பயிற்சி டெஸ்ட் போட்டிக்கு தேர்வாகியுள்ள இந்திய ஏ அணி வீரர்களும் இந்த யோ-யோ டெஸ்டில் பங்கேற்று தங்கள் உடல்திறனை நிரூபிக்க பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது. அதற்கான இந்திய ஏ அணியில், ஐபிஎல்-ல் கலக்கிய சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருந்தார். ஆனால், அவரும் யோ-யோ டெஸ்ட்டில் தோல்வி அடைந்து அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது அபாரமான பேட்டிங் மற்றும் துடிப்பான ஃபீலடிங்கால் ஐபிஎல்-ல் அனைவரையும் கவர்ந்த சஞ்சு சாம்சன், தகுதி தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறார்.
யோ – யோ டெஸ்ட் என்றால் என்ன?
இந்த டெஸ்ட் மூலம் ஒரு வீரரால் எவ்வளவு வேகத்தில் எவ்வளவு நேரம் ஓட முடிகிறது என்பது கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள இரு கோடுகளை, தொடர்ச்சியாக இரு இடைவெளிக்குள் ஓடி கடக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் அல்லது குறிப்பிட்ட சில நொடிகளுக்கு ஒருமுறை பீப் என சத்தம் கொடுக்கப்படும். சத்தம் கேட்டவுடன் ஒடிக்கொண்டிருக்கும் வீரர் இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். வேகம் குறைபட்டால் மீண்டும் அதே கோட்டில் துவங்கி அந்த வேகத்தை, அடுத்த பீப் சத்தம் வருவதற்குள் அடைய வேண்டும்.
இவ்வாறு வைக்கப்படும் யோ-யோ டெஸ்ட் அமைப்பு முழுவதும் மென்பொருள் கட்டமைப்பில் உள்ள ஒரு கணிப்பொறியில் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் இந்த டெஸ்ட் நடப்பதால், ஒரு வீரர் 20 மதிப்பெண் எடுத்தால் அவர் சிறப்பான உடற்தகுதியுடன் இருப்பதாக அர்த்தம்.
இந்த டெஸ்டில், இந்திய சீனியர் மற்றும் இந்திய ஏ அணி வீரர்கள் 16.1 மார்க் எடுத்தே ஆக வேண்டும். இதுதான் பென்ச்மார்க். இதற்கு கீழ் எடுத்தால் தோல்வி தான். ஷமியும், சஞ்சு சாம்சனும் 16.1 மதிப்பெண்ணுக்கும் குறைவாக எடுத்ததால், அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
யோ-யோ டெஸ்டில் ஷமி தோற்றது ஏன்?
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மிக மோசமான காலக்கட்டம் நிச்சயம் இதுவாகவே இருக்க முடியும். மோசமானது மட்டுமல்ல துரதிர்ஷ்டவசமானதும் கூட!. கள்ளத் தொடர்பு, மேட்ச் பிக்ஸிங், கொலை முயற்சி, வேறு திருமணம் செய்ய முயற்சி, தேசத் துரோகம் என ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் வரிசையாக புகார்களை அடுக்கியுள்ளார், அடுக்கி வருகிறார்.. இனியும் அடுக்குவார் போல…! ஆரம்பத்தில் அனைவரும் குழம்பி நிற்க(போலீஸ் உட்பட), ஹசின் ஜகான் சில வாட்ஸ் அப் ஆதாரங்களையும் வெளியிட, முகமது ஷமி மீது 498 A, 323, 307, 376, 506, 328, 34 ஆகிய பிரிவுகளில் கொல்கத்தாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதேசமயம், தன் மீதான அனைத்துப் புகார்களையும் மறுத்து வந்த முகமது ஷமி, மனைவியின் சில முக்கிய ஆதரங்களால் சற்றே பின் வாங்கியிருக்கிறார். இன்னமும், எது உண்மை? எது பொய்? என்ற முடிவுக்கு வர முடியவில்லை.
இந்த நிலையில், முகமது ஷமி 2வது திருமணத்துக்கு தயாராவதாக அவரது மனைவி புகார் போலீசில் சமீபத்தில் புகார் அளித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த ஷமி, 'முதல் திருமணத்திலேயே நிறைய சிக்கல்களை சந்திக்கும் சூழலில், இன்னொரு திருமணம் செய்வதற்கு தாம் என்ன பைத்தியமா?. கடந்த சில மாதங்களாக தம் மீது ஹசின் ஜஹான் கூறி வந்த புகார்களைப் போலவே இதுவும் பொய்யான ஒன்று. இரண்டாவது திருமணம் நடைபெற்றால் நிச்சயம் ஜஹானுக்கு அழைப்பு விடுக்கப்படும்' என்றார்.
இப்படி தன் மீது மனைவி சுமத்தும் அடுக்கடுக்கான புகாரால் ஷமி சற்றே நிலைகுலைந்து போயிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, பல குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய போது, அதிலும் பெரியளவு சாதிக்க முடியாமல் போனதால், ஷமி அப்செட்டாகவே இருந்தார். இதன் பாதிப்பினாலயே, அவர் தன்னை சிறப்பான முறையில் தயார்படுத்திக் கொள்ளாமல், யோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்து, தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்ட்யா மற்றும் கருண் நாயர் ஆகியோர் 18 மதிப்பெண்ணுக்கும் மேல் ஸ்கோர் செய்து மற்ற அனைத்து வீரர்களையும் விட சிறப்பாக டெஸ்ட்டை க்ளீயர் செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.