என்னது! முகமது கைஃப் இப்போ தான் ரிட்டையர்டு ஆகுறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகமது கைஃப் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அணியில் இடம்பிடித்தவர் முகமது கைஃப். இவரைப்பற்றி நினைத்தாலே நினைவிற்கு வருவது ஃபீல்டிங் தான்.

இவர் இந்திய அணியில் நுழைந்த காலக்கட்டத்தில் தான் யுவராஜ் சிங்கும் அணியில் இடம்பிடித்தார். இளம் வீரர்கள் என்பதால், இவர்கள் மீது எப்போதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவும்.

இந்தியாவின் முதல் நான்கு விக்கெட் வீழ்ந்த பிறகு, எப்போது யுவராஜ் – கைஃப் களமிறங்குவார்கள் என அப்போதைய இளம் ரசிகர்கள் காத்திருந்த காலமுண்டு. அதுவொரு பொன்னான கிரிக்கெட் நினைவுகளாகும்.

இருவரும் பாய்ந்து பாய்ந்து பிடிக்கும் கேட்சுகளுக்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 2002ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக யுவராஜ் சிங் அபாரமாக பிடித்த இரு கேட்சுகள் வெற்றிக்கு காரணமானது என்றால், 2004ம் ஆண்டு கராச்சியில் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில், இந்திய அணி நிர்ணயித்த 350 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான், 340 ரன்கள் எடுத்திருந்த போது, முக்கிய வீரர் சோயப் மாலிக் தூக்கி அடித்த பந்தை எங்கிருந்தோ பாய்ந்து வந்த கைஃப் அந்தரத்திலேயே அதை கேட்சாக்கி டைவ் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது காலத்திற்கும் மறக்க முடியாத பசுமையான நினைவாகும்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், தலைசிறந்த பீல்டராகவும் திகழ்ந்தவர் முகமது கைஃப். 2000ம் ஆண்டில் நடந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இவரது தலைமையில்தான் இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றியது.

2000 முதல் 2006ம் ஆண்டு வரை இந்திய அணியில் கைஃப் இடம்பிடித்திருந்தார். இதுவரை 13 டெஸ்ட், 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு சதத்துடன் 624 ரன்களும், ஒருநாள் போட்டியில் இரண்டு சதங்களுடன் 2753 ரன்களும் அடித்துள்ளார்.

இவை எல்லாவற்றிற்கும் மேல் கைஃப் என்றாலே நமக்கு நினைவுக்கு வருது கங்குலி தலைமையிலான இந்திய ஒருநாள் அணி, 2002ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிதான்.

இதில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் டிரெஸ்கோதிக் (109), கேப்டன் நாசர் ஹுசைன் (115) ஆகியோரின் சதத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 325 ரன்கள் குவித்தது.

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், 23.5வது ஓவரில் சச்சின் 14 ரன்னில் அவுட்டான போது, இந்திய அணியின் ஸ்கோர் 146-5. நிச்சயம் தோல்வி தான் என இந்திய அணி நிர்வாகமே நினைத்துக் கொண்டிருக்க, யுவராஜ் – கைஃப் அசத்தலான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு 256 பந்தில் 180 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. யுவராஜ் சிங் 69 ரன்னில் அவுட்டாக, இறுதிவரை களத்தில் நின்ற கைஃப், 75 பந்தில் 87 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெறவைத்தார்.

ஏற்கனவே இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து வென்ற போது, பிளின்டாப் மைதானத்திலேயே பனியனை கழட்டி வெற்றியைக் கொண்டாடியதற்கு பழி வாங்கும் வகையில், லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி தனது சட்டையை கழற்றி கையில் வைத்து சுழற்றி சுழற்றி வெற்றியை கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் இந்த வெற்றியை மறந்திருக்கமாட்டார்கள். ஆட்ட நாயகன் விருதை பெற்ற முகமது கைஃப்பையும் மறந்திருக்க மாட்டார்கள். இந்தப் போட்டியின் போது, சச்சின் அவுட்டானவுடன் கைஃபின் குடும்பத்தாரே டிவியை ஆஃப் செய்துவிட்டு, சினிமாவுக்கு சென்றுவிட்டனர். ஆனால், திரும்பி வந்து பார்த்தவர்களுக்கு, கைஃப் தான் இந்தியாவை வெற்றி பெறச் செய்தார் என்று தெரிந்தவுடன் அதிர்ந்தேவிட்டனர்.

இப்படியொரு அசத்தலான வெற்றியை பெற்றுக் கொடுத்த கைஃப், 12 வருடங்கள் கழித்து அதே நாளான நேற்று (ஜூலை 13), அனைத்து விதமான சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கைஃப் அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த கிரேக் சாப்பலை இந்திய வீரர்கள் யாரும் விரும்பவில்லை. ஆனால், கிரேக் சாப்பலோ கைஃப் மீது அளவுக்கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். 2006ல் கைஃப் மிக மோசமான ஃபார்மில் இருந்த போது, கடைசியாக அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நம்பிக்கையுடன் வாய்ப்பளித்தார் சாப்பல். ஆனால், கைஃப் அதிலும் ஜொலிக்காமல் போக, அதோடு இந்திய அணியில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டார்.

தொடர்ந்து, ஐபிஎல்-ல் சில ஆண்டுகள் ஆடிய கைஃப் அதன்பிறகு, கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவே பலரும் நினைத்திருந்தனர். ஆனால், நேற்று தான் சர்வதேச போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வுப் பெறுவதாக அவர் அறிவித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள்… குறிப்பாக 90’s கிட்ஸ் பேரதிர்ச்சியில் உள்ளனர்.

×Close
×Close