இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கடந்த 6ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில், சில ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்கள் பதிவு செய்திருந்தார். அதில், ஷமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக சாட் செய்துள்ளது போன்று இருந்தது. அந்தரங்க விஷயங்கள் பற்றி அதில் பரிமாறப்பட்டு இருந்தது. அதில் ஒருவர் கராச்சியை சேர்ந்த விபச்சாரி என்று ஹசின் தெரிவித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து ஹசின் ஜகான் டிவி சேனல்களுக்கு அளித்த பேட்டியில், ஷமியின் காருக்குள் அவரது செல்போன் இருந்ததாகவும், அதை எடுத்து பார்த்தபோது இந்த ரகசியங்கள் தெரியவந்ததாக கூறினார். வெகுகாலமாகவே ஷமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும் ஜகான் கூறினார்.
மேலும், முகமது ஷமி குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயன்றதாகவும் ஹசின் ஜகான் குற்றம் சாட்டியிருந்தார். தனது மகளுக்காக பொறுமை காத்து வந்ததாகவும், ஆனால் ஷமியின் ஆபாச உரையாடல்களை பார்த்த பிறகு பொறுமை காக்க முடியாமல் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஹசின் ஜகான் தெரிவித்து இருந்தார்.
மனைவியின் இந்த சரமாரிப் புகார்களுக்கு பதில் அளித்த முகமது ஷமி, "எனது வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், என்னை தரம் தாழ்த்துவதற்காகவே இது போன்று பொய் புகார்கள் கூறப்பட்டுள்ளது. அவர் கூறிய புகார்கள் அனைத்திற்கும் ஆதாரம் இருந்த காட்டச் சொல்லுங்கள்" என்று கூறினார்.
இந்தச் சூழ்நிலையில், ஷமி மீது அவரது மனைவி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே சென்றார். இதில் நேற்று (வியாழன்) அவர் அளித்த குற்றச்சாட்டில் மேலும் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த அலிஷ்பா என்பவரிடம் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவதற்காக ஷமி பணம் பெற்றுள்ளார். அந்த பணத்தை அலிஷ்பாவிடம் இருந்து மொஹம்மத் பாய் என்பவர் மூலம் ஷமி வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, ரூம் புக் செய்து ஷமியும், அலிஷ்பாவும் உல்லாசமாக இருந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கும் பதிலளித்த ஷமி, "ஹசின் ஜகான் பைத்தியமாகிவிட்டார் என நினைக்கிறன். இப்போதும் சொல்கிறேன், என் மீது சுமத்தியுள்ள குற்றம் அனைத்தையும் நிரூபிக்கச் சொல்லுங்கள். நான் அவருக்கு போன் செய்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால், அவர் எடுப்பதில்லை" என்றார்.
ஹசின் ஜகானின் தொடர்ச்சியான குற்றச்சாட்டை அடுத்து, கொல்கத்தா லால் பஜார் காவல் நிலையத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 498a(domestic violence), 323 மற்றும் 307 (attempt to murder), 506 மற்றும் 306 பிரிவின் கீழும் ஷமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.