worldcup 2023 | india-vs-australia | mohammed-shami: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் நாளை ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 19 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ஃபைனலில் ஷமி பிளான்
இந்நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதி போட்டியில் பந்தை ஸ்விங் செய்ய முடியவில்லை என்றால், தனது திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷமி அளித்துள்ள பேட்டியில், "நான் எப்போதும் பந்தை ஸ்விங் ஆகுவதற்கு ஏற்றபடியே பவுலிங் திட்டங்களை மாற்றி கொள்வேன். முதல் ஸ்விங் என்ன என்பதை அறிந்து, பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வேன். ஒருவேளை பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால், அதற்கேற்றபடி பந்துவீசுவேன். அப்படி பந்து ஸ்விங் ஆகவில்லையென்றால், ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைன் மற்றும் லெந்தில் வீசுவேன். பேட்ஸ்மேன்களுக்கு எட்ஜ் அடிக்கும் பகுதியில் அதிகமாக பிட்ச் செய்து, டிரைவ் ஆட வைக்க முயற்சிப்பேன்" என்று கூறியுள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக விலகிய ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ஆடும் லெவனில் இடம் பிடித்த ஷமி தனது அபார பந்துவீச்சு மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். 'இத்தனை நாள் எங்கு இருந்தார்? இந்திய அணியில் தான் விளையாடினாரா?' என அனைவரின் வாயைப் பிளக்க வைத்து மிரட்டி வருகிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டி வருகிறார். இறுதிப் போட்டியிலும் பந்துவீச்சில் கலக்குவார் என நம்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“