முகமது ஷமி குற்றமற்றவர்; ஐபிஎல்லில் விளையாடுவது உறுதி! - பிசிசிஐ அறிவிப்பு

ஷமியின் மீது எந்த குற்ற நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என நிர்வாகக் குழு அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கடந்த மார்ச் 6ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில், சில ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்கள் பதிவு செய்திருந்தார். அதில், ஷமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக சாட் செய்துள்ளது போன்று இருந்தது. அந்தரங்க விஷயங்கள் பற்றி அதில் பரிமாறப்பட்டு இருந்தது. அதில் ஒருவர் கராச்சியை சேர்ந்த விபச்சாரி என்று ஹசின் தெரிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து ஹசின் ஜகான் டிவி சேனல்களுக்கு அளித்த பேட்டியில், ஷமியின் காருக்குள் அவரது செல்போன் இருந்ததாகவும், அதை எடுத்து பார்த்தபோது இந்த ரகசியங்கள் தெரியவந்ததாக கூறினார். வெகுகாலமாகவே ஷமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும் ஜகான் கூறினார்.

மேலும், முகமது ஷமி குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயன்றதாகவும் ஹசின் ஜகான் குற்றம் சாட்டியிருந்தார். தனது மகளுக்காக பொறுமை காத்து வந்ததாகவும், ஆனால் ஷமியின் ஆபாச உரையாடல்களை பார்த்த பிறகு பொறுமை காக்க முடியாமல் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஹசின் ஜகான் தெரிவித்து இருந்தார்.

மேலும், ‘பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த அலிஷ்பா என்பவரிடம் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவதற்காக ஷமி பணம் பெற்றுள்ளார். அந்த பணத்தை அலிஷ்பாவிடம் இருந்து மொஹம்மத் பாய் என்பவர் மூலம் ஷமி வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, ரூம் புக் செய்து ஷமியும், அலிஷ்பாவும் உல்லாசமாக இருந்துள்ளனர்’ என்று அவரது மனைவி அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார். இந்தநிலையில், ஷமி மீது கொல்கத்தா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, பிசிசிஐ வெளியிட்ட வீரர்களின் ஆண்டு ஒப்பந்த பட்டியலில் ஷமியின் பெயர் இடம் பெறாமல் இருந்தது. இதனால், ஐபிஎல்-ல் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி வலுத்தது. இதைத் தொடர்ந்து, பிசிசிஐ-ன் ஊழல் தடுப்புப் பிரிவு, ஷமி மீதான மேட்ச் பிக்ஸிங் புகார் குறித்து விசாரணையில் இறங்கியது. இதன் தலைவர் நீரஜ் குமார் அடங்கிய குழு, ஷமி குறித்த விசாரணையை ஏழு நாட்களில் நடத்தி முடித்து, இன்று கிரிக்கெட் நிர்வாக குழுவிடம் தனது அறிக்கையை ஒப்படைத்தது.

அந்த அறிக்கையை அடுத்து, ஷமியின் மீது எந்த குற்ற நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. அதுதவிர, பிசிசிஐ-ன் ‘பி’ கிரேடில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும், ஐபிஎல்-ல் அவர் விளையாட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close