ஒரு சிறிய பிளாஷ்பேக்….
2018ம் ஆண்டு… மார்ச் மாதம்… முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், ஷமி மீது மலை போல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி, ஹசின் ஜகான் தனது பேஸ்புக் பக்கத்தில், சில ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்கள் பதிவு செய்திருந்தார். அதில், ஷமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக சாட் செய்துள்ளது போன்று இருந்தது. அதில் ஒருவர் கராச்சியை சேர்ந்த விபச்சாரி என்று ஹசின் தெரிவித்திருந்தார். அவரது பேஸ்புக் பக்கம் அடுத்த நாள் காலையே முடக்கப்பட்டது.
இதையடுத்து டிவி சேனலுக்கு ஹசின் ஜகான் அளித்த பேட்டியில், ஷமியின் காருக்குள் அவரது செல்போன் இருந்ததாகவும், அதை எடுத்து பார்த்தபோது இந்த ரகசியங்கள் தெரியவந்ததாக கூறினார். மேலும் வெகுகாலமாகவே ஷமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், ஷமி குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயன்றதாகவும் ஹசின் ஜகான் குற்றஞ்சாட்ட பரபரத்தது கிரிக்கெட் உலகம்.
இது எல்லாவற்றையும் விட அதிர்ச்சி தரும் விதமாக, “பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த அலிஷ்பா என்பவரிடம் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவதற்காக ஷமி பணம் பெற்றுள்ளார். அந்த பணத்தை அலிஷ்பாவிடம் இருந்து மொஹம்மத் பாய் என்பவர் மூலம் ஷமி வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, ரூம் புக் செய்து ஷமியும், அலிஷ்பாவும் உல்லாசமாக இருந்துள்ளனர்” என்று ஹசின் தெரிவிக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
ஹசின் ஜகானின் தொடர்ச்சியான குற்றச்சாட்டை அடுத்து, கொல்கத்தா லால் பஜார் காவல் நிலையத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 498a(domestic violence), 323 மற்றும் 307 (attempt to murder), 506 மற்றும் 306 பிரிவின் கீழும் ஷமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஷமி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரலாற்று சிறப்பு மிக்க ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் கூட, யோ யோ டெஸ்ட்டில் தோல்வி அடைந்ததால், அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
2018 ஐபிஎல் தொடரிலும் ஷமி சொதப்ப, அவரது கிரிக்கெட் எதிர்காலமே பெரும் கேள்விக்குறியானது.
ஆனால், இவ்வளவு பாதிப்பால் ஆட்கொண்டதாலோ என்னவோ, 2019ம் ஆண்டில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் ஷமி. குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதம் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஷமியின் பந்துவீச்சில் மிரண்டது தென்.ஆ., அணி மட்டுமல்ல, இந்திய அணி நிர்வாகமும் கூட…
அவரது ஆக்ரோஷ பவுன்ஸ், ஸ்டம்ப்பை நோக்கி அட்டகாசமாக பந்தை திருப்பியது என்று மிரள வைத்தார் மனிதர்.
தன் மீதான குற்றச்சாட்டு அனைத்திற்கும் பெரும்பாலும் மௌனத்தையே பதிலாக அளித்த ஷமி, தனது உடல் எடையை 75 கிலோவாக குறைத்து, முதலில் தனது ஃபிட்னஸை மேம்படுத்தினார். தொடர்ந்து, பந்தை சரியான லைன் அன்ட் லென்த்தில் வீச அதிக பயிற்சி எடுத்துக் கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, தனது உடல் ஆற்றலை சேமித்துக் கொள்ளும் பழக்கத்தை தொடர ஆரம்பித்து இருக்கிறார்.
அதாவது, தேவைப்படாத நேரத்தில் கடுமையாக பந்து வீசாமல், மெலுக்காக ஆக்ஷன் செய்து தனது ஆற்றலை சேமித்துக் கொள்கிறார். கடுமையான வெயிலை திறம்படசமாளிக்கிறார். பிறகு, தேவைப்படும் நேரத்தில் தனது உச்சபட்ச ஆற்றலை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை அள்ளுகிறார்.
இப்போது வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் ஷமியின் ஆர்ப்பாட்டமான டெலிவரிகள், வங்கப் புலிகளின் நாடி நரம்புகளை ஒடுக்கி, சப்தமே இல்லாமல் அடி பணிய வைத்திருக்கிறது.
முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் அறுவடை செய்திருக்கிறார் ஷமி.
வாழ்க்கையில் எவ்வளவ இடர்கள் இடையிடையே இடம் நுழைந்தாலும், நாமாக நினைக்கும் வரை யாராலும் நம்மை மண்டியிட வைக்க முடியாது என்பதற்கு ஷமி மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.