இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் நவம்பர் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்கி நடக்கவிருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தயாராக இருப்பதாகவும், இத்தொடரின் இரண்டாம் பாதியில் அவர் களமிறங்குவார் என்றும், அதற்கு முன் உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பையில் ஷமி ஆட இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: SHAMI FITNESS UPDATE: Pacer may return to India team for second half of Australia tour
ஷமி இந்திய அணியில் கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தான் விளையாடினார். அந்தத் தொடரின் போது அவருக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டது. இருப்பினும் தொடர் முழுதும் அவர் ஆடி இருந்தார். அதன் பிறகு கணுக்கால் வலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது மறுவாழ்வு பயிற்சிக்காக பெங்களுருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார்.
அதனால், இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவரால் பங்கேற்க இயலவில்லை. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டின் முடிவில், ஷமி இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெலுடன் நெட்ஸில் பந்துவீசுவதைக் காண முடிந்தது. தற்போது அவர் பயிற்சி பெறும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் அனுமதிச் சான்றிதழைப் பெற்றவுடன், ரஞ்சி போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்கிழமை குருகிராமில் நடந்த நிகழ்ச்சியில் ஷமி பேசுகையில், “நான் நேற்று (திங்கட்கிழமை) நன்றாக உணர்ந்தேன், ஏனென்றால் நான் என் உடலில் அதிக அழுத்தத்தை கொடுக்க முடியாது என்பதால், பாதி ரன்-அப் மற்றும் ஆஃப் பவுலிங் செய்தேன். நேற்று நான் சரியாக பந்துவீசுவேன் என்று முடிவு செய்தோம், மேலும் எனது 100 சதவீதத்தை கொடுத்தேன். அது நன்றாக இருந்தது. முடிவுகளும் நன்றாக உள்ளன. நான் விரைவில் மீண்டு அதே பாதைக்கு வருவேன் என்று நம்புகிறேன்." என்று கூறினார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் இரண்டாம் பாதியில் ஷமி களமாட இருக்கும் நிலையில், அவரது பணிச்சுமை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது முழு ரன்-அப்புடன் மீண்டும் பந்துவீச்சைத் தொடங்கி இருக்கும் ஷமி, ஒரு போட்டி அல்லது தொடரில் விளையாடுவதற்கு முன், நெட்ஸில் பேட்ஸ்மேன்களுக்குப் பந்துவீசுவார். மேலும், அவரின் குறைந்தது 20-25 ஓவர்கள் வீசும் திறன் குறித்து இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டி இருப்பதாகவும் புரிந்துகொள்ள முடிகிறது.
இது தெரிந்தவர்களின் கூற்றுப்படி, ஷமி மீண்டும் போட்டித் திறனைப் பெறுவதற்கு அடுத்த 10 நாட்கள் முக்கியமானவை. அவர் திட்டமிட்டபடி குணமடைந்தால், அவர் பெங்களூரில் கர்நாடகாவுக்கு எதிரான பெங்கால் நான்காவது சுற்று ஆட்டத்தில் விளையாடுவார் என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. இல்லையெனில், மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ஐந்தாவது சுற்று ஆட்டத்தில் இடம்பெறலாம்.
"அவர் தொடர்ந்து குணமடைந்தால் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் விளையாடலாம். அவர் அந்த போட்டியில் விளையாடினால், அவர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடலாம், பின்னர் மெதுவாக அணியில் மீண்டும் ஒருங்கிணைக்க முடியும். அவர் மீண்டும் திரும்புவதில் பின்னடைவை சந்தித்ததால், அவர் மீண்டும் மறுவாழ்வு செயல்முறைக்கு செல்ல வேண்டியிருக்கும். அது இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது” என்று அணி நிர்வாகத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.