இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறது.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர்பான பேச்சுக்கள் இப்போதே எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், இந்த தொடர் குறித்து பேசியுள்ள இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்த போட்டி பற்றி ஆஸ்திரேலியா அணி தான் கவலைப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Mohammed Shami says India are favourites and Australia need to be worried for Border-Gavaskar Trophy
2014/15 பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்குப் பிறகு, ஆஸ்திரேலியா இந்தியாவை இன்னும் ஒருமுறை தோற்கடிக்கவில்லை. அந்த அணி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் தொடர்களை இந்தியாவிடம் பறிகொடுத்துள்ளது. இதன் மூலம், பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இது தொடர்பாக முகமது ஷமி பேசுகையில், "நாங்கள் அனைவருக்கும் பிடித்த அணி. இந்த தொடர் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டும்." என்று கூறினார். மேலும் பேசிய ஷமி, "நான் விரைவில் மீண்டும் வருவதற்கு கடினமாக உழைக்கிறேன், ஏனென்றால் நான் சில காலமாக விளையாடவில்லை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும், நான் திரும்பி வரும்போது எந்த அசௌகரியமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். எந்த அசௌகரியமும் ஏற்படாமல் இருக்க, எனது உடற்தகுதிக்கு நான் உழைக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.
முன்னதாக, பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா மீண்டும் கைப்பற்றும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்தார். “இரு தரப்பிலும் இருக்கும் திறமையுடன் இது நிச்சயமாக ஒரு அற்புதமான தொடராக இருக்கும், மேலும் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் ஏன் எங்கள் அன்பான விளையாட்டின் இறுதி வடிவம் என்பதையும் இது காண்பிக்கும். எனது கணிப்பு இந்தியாவுக்கு 3-1 வெற்றியாகும், ”என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
செப்டம்பர் 19 முதல், இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த இரண்டு தொடர்களுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“