Mohammed Shami: நாளுமன்ற மக்களவை தேர்தல்கள் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி அரிப்புகள் அடுத்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தேசிய, மாநில அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தையை பரபரப்பாக நடத்தி வருகிறன்றன. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க) சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவைச் சேர்ந்த ஷமி மேற்கு வங்கத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவது பா.ஜ.க தலைமை ஷமியை தொடர்பு கொண்டு கேட்டதாகவும், ஆனால், இது தொடர்பாக அவர் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், ஷமி மற்றும் பா.ஜ.க இடையேயான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதிகளில் ஷமியை களமிறக்கி பெரிய வெற்றியை பெற பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. சந்தேஷ்காலி வன்முறைக்குப் பிறகு, சமீபத்தில் அதிகம் பேசப்படும் பாசிர்ஹத் மக்களவைத் தொகுதியில் ஷமியை நிறுத்துவது தொடர்பாக பா.ஜ.க ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷமி, கடந்த ஆண்டு இந்திய மண்ணில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக ஜொலித்தார். தற்போது, அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வில் உள்ள ஷமி, உலகக் கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடவில்லை. ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஷமி மேற்கு வங்க அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“