2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா வென்றதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்தத் தொடரின்போது ஹர்திக் பாண்டியா கட்டிய கைகடிகாரம், சுனில் கவாஸ்கர் டான்ஸ், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல் என பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், துபையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் போது முகமது ஷமி மைதானத்திலே தண்ணீர் அல்லது ஜூஸ் குடிப்பதைப் பார்வையாளர்கள் கண்டனர். ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்காமல் முகமது ஷமி தண்ணீர் குடித்தது தவறு என்று சமூக வலைதளங்களில் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இஸ்லாத்தில் புனித ரமலான் மாதத்தில் ஒரு இஸ்லாமியர் நோன்பு கடைபிடிக்காமல் இருப்பது தவறு என்றும், ரமலான் மாதத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றம் என்றும் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மௌலானா ஷாஹாபுதீன் ரஸ்வி பரேல்வி கூறியிருந்தார்.
அதே நேரத்தில், பிரபல பாடலாசிரியரும் எழுத்தாளருமான ஜாவேத் அக்தர் கிரிக்கெட் வீரர் ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். “ஷமி, கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் தண்ணீர் குடிப்பதில் பிரச்னை என்று கூறும் அந்த முட்டாள்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எங்களைப் பெருமைப்படுத்தும் சிறந்த இந்திய அணியின் ஒரு முக்கிய அங்கமாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கும் அணிக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
முகமது ஷமி ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்காமல், போட்டியின்போது மைதானத்தில் தண்ணீர் குடித்தது சர்ச்சையான நிலையில், இந்த விவாதம் நாட்டின் எல்லைகளைக் கடந்து பாகிஸ்தானிலும் விவாதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்கிடம், போட்டியின்போது முகமது ஷமி நோன்பு கடைப்பிடிக்காதது குறித்து பாகிஸ்தானின் சிட்டி-42 செய்தி சேனலின் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இன்சமாம்-உல்-ஹக், “விளையாடும் போது நோன்பை கடைபிடிக்காதது பெரிய விஷயமல்ல. எனக்கு தோன்றுவது என்னவென்றால், அவர் பொதுவில் தண்ணீர் குடித்ததால்தான் அதிகமான எதிர்ப்பு ஏற்பட்டது. விளையாடும் போது நோன்பு கடைப்பிடிப்பது கடினம். எங்களுக்கும் இதில் சொந்த அனுபவம் உண்டு. நோன்பு நேரத்தில் போட்டி நடந்தால், தண்ணீர் இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி திரைக்குப் பின்னால் சென்றுவிடுவோம். திரையின் மறைவில் தண்ணீர் குடித்துவிடுவோம். நான் அவரிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால், தண்ணீர் குடிக்க வேண்டுமானால் திரையின் பின்னால் சென்று குடிக்க வேண்டும். எல்லாருக்கும் முன்னிலையில் குடிக்க வேண்டாம். நீங்கள் பயணத்தில் இருக்கிறீர்கள் என்றால், நோன்பை விடுவதற்கு அனுமதி இருக்கிறது” என்று கூறினார்.
மேலும், “விளையாடும்போது நோன்பு கடைபிடிப்பது மிகவும் கடினம். ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காக நோன்பு கடைப்பிடிக்கவோ கைவிடவோ கூடாது. ஒரு வேகப்பந்து வீச்சாளர் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், போட்டிகளின் போது நோன்பு இருப்பது கடினமான பணி” என்று இன்சமாம்-உல்-ஹக் கூறினார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியின் போது முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்போது, ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்திய பிறகு, ஷமி தரையில் அமர்ந்தார். அவர் அமர்ந்த விதம் அவர் தொழுகையின்போது அமர்ந்து வணங்குவதைப் போல் இருந்த்து. ஆனால் அவர் உடனே எழுந்துவிட்டார்.
இதைப் பார்த்த சிலர், முகமது ஷமி சர்ச்சையைத் தவிர்க்கவே உடனே எழுந்துவிட்டார் என்று கூறியதால் சர்ச்சையானது. இது குறித்து ஒரு யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய முகமது ஷமி, “நான் தொழுகை செய்ய விரும்பினேன், ஆனால், அதைச் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டனர். அவர்களுடைய மனதில் என்ன ஆசை இருக்கிறதோ, அதையே அவர்கள் கூறினார்கள்” என்று கூறினார்.
மேலும், “முதலில், நான் யாருக்கும் பயப்படவில்லை. நான் ஒரு இஸ்லாமியர். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். எனக்கு, நாடுதான் முதலில் முக்கியம், இது யாரையாவது தொந்தரவு செய்தால், எனக்கு கவலையில்லை. நான் தொழுகை செய்ய விரும்பினால், அப்படியே செய்திருப்பேன்” என்று முகமது பதிலளித்தார்.
முகமது ஷமி நோன்பு கடைபிடிக்கவில்லை என்ற சர்ச்சை குறித்து, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சக்லைன் முஷ்டாக் கூறுகையில், “மக்கள் ஏன் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. நாம் நல்ல மனிதர்களாக மாறுவதிலும், நேர்மறையான விஷயங்களுடன் முன்னேறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் நாம் எதைப் பற்றி விவாதிக்கிறோம்? சிறிதளவு கூட பயனளிக்காத விஷயங்களைப் பற்றி நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் இந்த விஷயங்களில் சற்று அதிகமாக ஈடுபடுகிறோம். இதுபோன்ற செயல்கள் பாகிஸ்தானில் மட்டுமல்ல, இந்தியாவிலும் அதிகரித்து வருகின்றன” என்று கவலை தெரிவித்தார்.