Mohammed Shami: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வலம் வருபவர் முகமது ஷமி. இவர் கடந்த ஆண்டு இறுதியில் இந்திய மண்ணில் நடைப்பெற்ற உலகக்கோப்பை தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார்.
33 வயதான ஷமிக்கு உலகக்கோப்பை தொடரின் முடிவில் குதிகால் காயம் ஏற்பட்டது. தற்போது அதில் இருந்து மீண்டு வருகிறார். இந்நிலையில், "ஜெய் ஸ்ரீ ராம்" மற்றும் "அல்லாஹு அக்பர்" என்று ஆயிரம் முறை உச்சரிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நியூஸ் 18-க்கு அளித்துள்ள பேட்டியில், “ஒவ்வொரு மதத்திலும், எதிர் மதத்தைச் சேர்ந்த நபரை விரும்பாத 5 முதல் 10 நபர்களை நீங்கள் சந்திப்பீர்கள். அதற்கு எதிராக எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
நமாஸ் சர்ச்சை வந்தது போல, ராமர் கோவில் கட்டப்படுகிறது என்றால், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதில் என்ன பிரச்சனை. 1000 முறை கூட சொல்லுங்கள். நான் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டுமென்றால் 1000 முறை வேண்டுமானாலும் சொல்வேன். இதில் என்ன வித்தியாசம் வந்துவிடப்போகிறது?”என்று அவர் கூறினார்.
முன்னதாக, முகமது ஷமி தான் ஒரு பெருமைமிக்க இந்தியன் என்றும், ஒரு பெருமைமிக்க முஸ்லீம் என்றும், தான் பிரார்த்தனை செய்ய விரும்பினால் யாரும் தன்னை தடுத்திருக்க மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும், ஷமி இதற்கு முன்பு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு பிரார்த்தனை செய்ததில்லை என்றும், இலங்கைக்கு எதிரான பரபரப்பான பந்துவீச்சுக்குப் பிறகு தனது சைகையைச் சுற்றி எப்படி ஆதாரமற்ற கதைகள் உருவாக்கப்பட்டன என்பது குறித்து குழப்பமடைந்ததாகவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Mohammed Shami on Jai Shri Ram chants
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“