ரஞ்சி கோப்பை தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், எலைட் குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள மத்திய பிரதேசம் - பெங்கால் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று புதன்கிழமை முதல் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 228 ரன்கள் எடுத்தது. அதிபட்சமாக ஷாபாஸ் அகமது 92 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, முதல் இன்னிங்சில் ஆடிய மத்திய பிரதேசம் அணி 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சுப்ரான்ஷு சேனாபதி 47 ரன்கள் எடுத்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: WATCH: Mohammed Shami picks 4 wickets in 1st innings on Ranji Trophy comeback, helps Bengal secure lead
தொடர்ந்து, 2வது இன்னிங்சில் ஆடி வரும் பெங்கால் அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 48 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் சுதீப் குமார் கராமி மற்றும் சுதீப் சட்டர்ஜி தலா 40 ரன்களுக்கு அவுட் ஆகினர். ரிட்டிக் சாட்டர்ஜி 33 ரன்களுடனும், விருத்திமான் சாஹா 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை வழக்கம் போல் 3ம் நாள் ஆட்டம் நடக்கும்.
தொடக்க ஆட்டத்திலே மிரட்டல் பவுலிங்
இந்த நிலையில், ஓராண்டு ஓய்வுக்குப் பிறகு போட்டி கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ள இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது தொடக்க ஆட்டத்திலே 4 விக்கெட்டை கைப்பற்றி அசத்தி இருக்கிறார். ஷமி 231 ரன்கள் முன்னிலையுடன் இருக்கும் பெங்கால் அணிக்காக ஆடி வரும் சூழலில், அந்த அணிக்காக தனது சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.
ஷமி முதலில் மத்திய பிரதேச அணியின் கேப்டன் ஷுபம் ஷர்மாவை 8 ரன்களுக்கு அவுட் ஆக்கினார். அதன் பின்னர், ஷமி தனது 18வது ஓவரில், குமார் கார்த்திகேயா மற்றும் குல்வந்த் கெஜ்ரோலியா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதற்கு முன்பாக அவர் ஆல்-ரவுண்டர் சரண்ஷ் ஜெயின் விக்கெட்டை வீழ்த்தி 19 ஓவர்களில் 4 மெய்டன், 54 ரன்கள், 4 விக்கெட் என்ற புள்ளிகளுடன் பெங்கால் அணியின் சிறந்த பந்துவீச்சாளராக முடித்தார்.
ஷமி நவம்பர் 2018 -க்குப் பிறகு பெங்கால் அணிக்காக தனது முதல் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடுகிறார். அந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு பார்டர்-கவாஸ்கர் டிராபி சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு கேரளாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் ஷமி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேநேரத்தில், பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்தியா 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது.
ஷமி முழு உடற்தகுதி அடைந்தால், நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“