IPL 2024 | Mohammed Shami: 17வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல் 2024) தொடர் மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரில் களமாடும் 10 அணிகளும் அதன் வீரர்களுடன் முகாமிட்டு பயிற்சிகளை நடத்தி வருகின்றன. இதனிடையே, தொடரின் போட்டிக்கான அட்டவணை இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வரும் இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் 2024 தொடரில் இருந்து விலகியுள்ளார். தனது காயத்திற்காக அவர் இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாத 33 வயதான ஷமி, கடைசியாக நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார்.
"ஜனவரி கடைசி வாரத்தில் கணுக்கால் ஊசி போடுவதற்காக ஷமி லண்டனில் இருந்தார். மேலும் மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவர் லேசாக ஓட ஆரம்பித்து அதிலிருந்து எடுக்கலாம் என்று அவரிடம் கூறப்பட்டது. ஆனால் ஊசி வேலை செய்யவில்லை, இப்போது அறுவை சிகிச்சை மட்டுமே எஞ்சியுள்ளது. அறுவை சிகிச்சைக்காக அவர் விரைவில் இங்கிலாந்து செல்லவுள்ளார். ஐ.பி.எல் கேள்விக்கு அப்பாற்பட்டதாகத் தெரிகிறது, ”என்று பி.சி.சி.ஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஷமிக்காக தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ) திட்டமிட்டுள்ள காயம் மறுவாழ்வு மேலாண்மை திட்டம் குறித்த வளர்ச்சி கேள்விக்குறியை எழுப்புகிறது. என்.சி.ஏ-யின் பழமைவாத சிந்தனை ஷமியின் விஷயத்தில் வேலை செய்யவில்லை என்று விஷயங்களை அறிந்தவர்கள் நம்புகிறார்கள்.
“ஷமி அறுவை சிகிச்சைக்காக நேரடியாகச் சென்றிருக்க வேண்டும், அது என்.சி.ஏ-வின் முடிவாக இருந்திருக்க வேண்டும். இரண்டு மாத ஓய்வும், ஊசியும் சரியாக வேலை செய்யாது, அதுதான் நடந்துள்ளது. அவர் இந்தியாவின் சொத்து. ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிக்கு இந்திய அணிக்கு அவர் தேவைப்படுவார், ”என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய மண்ணில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஷமி 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். அவர் பந்துவீசும் போது தரையிறங்குவதில் சிக்கல்கள் இருந்தது. இருப்பினும் அவர் அந்த வலியுடன் விளையாடினார். அது அவரது செயல்திறனை பாதிக்க விடவில்லை. உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஷமிக்கு சமீபத்தில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“