Mohammed-shami | indian-cricket-team: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வலம் வருபவர் முகமது ஷமி. இவர் இந்திய மண்ணில் நடைப்பெற்ற உலகக்கோப்பை தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார்.
இந்நிலையில், உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து, தனது கொண்டாட்டத்தைப் பற்றி வதந்திகளைப் பரப்பி ட்ரோல் செய்தவர்களை இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடுமையாக சாடியுள்ளார்.
ஷமி 2023 உலகக் கோப்பை தொடரில் மூன்று ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் இரண்டு நியூசிலாந்துக்கு எதிராகவும் மற்றொன்று இலங்கைக்கு எதிராகவும் வந்தது. இருப்பினும், இலங்கை போட்டியின் போது, ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதைக் கொண்டாடிய சமூக வலைதள பயனர்களில் சிலர் சர்ச்சையை உருவாக்க முயற்சித்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் வைரலான ஒரு வீடியோவில், இலங்கையின் இன்னிங்ஸின் 13 வது ஓவரில் கசுன் ராஜிதா விக்கெட்டை கைப்பற்றி தனது 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் ஷமி மண்டியிட்டு இரு கைகளாலும் தரையைத் தொடுவதைக் காணலாம். அப்போது இந்திய அணி வீரர்கள் உற்சாகப்படுத்த அவரைச் சுற்றி கூடினர்.
இந்நிலையில், சமூக வலைதள பயனர்களில் சிலர் ஷமியின் கொண்டாட்டத்தைப் பார்த்த பிறகு, அவர் மைதானத்தில் நமாஸ் (பிரார்த்தனை) செய்ய விரும்புவதாகவும், ஆனால் பின்னடைவுக்கு பயந்து தன்னைத் தன்னை தடுத்து நிறுத்தி கொண்டதாகவும் கூறியுள்ளனர். இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் தனது சதத்தை மைதானத்தில் பிரார்த்தனை செய்து கொண்டாடிய இருந்தனர். அதனை ஒப்பிட்டு ஷமியை ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில், ஷமி தான் ஒரு பெருமைமிக்க இந்தியன் என்றும், ஒரு பெருமைமிக்க முஸ்லீம் என்றும், தான் பிரார்த்தனை செய்ய விரும்பினால் யாரும் தன்னை தடுத்திருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஷமி இதற்கு முன்பு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு பிரார்த்தனை செய்ததில்லை என்றும், இலங்கைக்கு எதிரான பரபரப்பான பந்துவீச்சுக்குப் பிறகு தனது சைகையைச் சுற்றி எப்படி ஆதாரமற்ற கதைகள் உருவாக்கப்பட்டன என்பது குறித்து குழப்பமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஷமி பேசுகையில், "நான் பிரார்த்தனை செய்ய நினைத்தால், யாரால் என்னை தடுக்க முடியும்? யாரும் பிரார்த்தனை செய்வதை நான் நிறுத்த மாட்டேன். நான் பிரார்த்தனை செய்ய நினைத்தால் பிரார்த்தனை செய்வேன். இதில் என்ன பிரச்சனை?. நான் ஒரு முஸ்லிம் என்று பெருமையுடன் கூறுவேன். நான் ஒரு இந்தியன் என்றும் பெருமிதத்துடன் கூறுவேன். அதில் என்ன பிரச்சனை?
ஒருவரிடம் பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்? நான் இதற்கு முன் எப்போதாவது 5 விக்கெட் வீழ்த்திய பிறகு பிரார்த்தனை செய்திருக்கிறேனா? நான் பல ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். நீங்கள் எங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், நான் அங்கு சென்று பிரார்த்தனை செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.
"இப்படிப்பட்டவர்கள் யார் பக்கமும் இல்லை. அவர்கள் ஒரு குழப்பத்தை மட்டுமே உருவாக்க விரும்புகிறார்கள். இலங்கைக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 200 சதவீத தீவிரத்துடன் பந்து வீசினேன். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, இன்று நான் 5 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தேன். பலமுறை எட்ஜ் அடித்தாலும் விக்கெட் கிடைக்காமல் சோர்வாக இருந்தேன். நான் முழுவீச்சில் பந்துவீசிக்கொண்டிருந்தேன். எனவே, எனது 5வது விக்கெட்டைப் பெற்றபோது, நான் தரையில் அப்படியே மண்டியிட்டேன். மக்கள் அதற்கு வேறு அர்த்தம் கொடுத்தனர். இந்த விஷயங்களை தவறாகப் புரிந்துகொள்பவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று நான் நினைக்கிறேன்." என்றும் ஷமி கூறியுள்ளார்.
அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
இந்நிலையில், அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உரிய விருது அர்ஜுனா விருதாகும்.
நடப்பு ஆண்டு அர்ஜுனா விருதுக்கான வீரர், வீராங்கனை பட்டியலில் முகமது ஷமியின் பெயரையும் தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியதையடுத்து முகமது ஷமியின் பெயரை தேர்வுக்குழு அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.