இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று புதன்கிழமை (ஜனவரி 22) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து, பேட்டிங் ஆடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 132 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 68 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பவுலிங் வீசிய இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டையும், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அர்ஷதீப் சிங் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 133 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் 8 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் குவித்தார். சஞ்சு சாம்சன் 26 ரன்களும், திலக் வர்மா 19 ரன்னும் எடுத்தனர்.
ஷமி ஏன் ஆடவில்லை?
இந்நிலையில், இந்தப் போட்டிக்கான இந்திய ஆடும் லெவன் அணியில் வேகப்பந்து வீச்சாளார் முகமது ஷமி இடம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அவர் 14 மாதங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய நிலையில், அவர் நிச்சயம் களமாடுவர் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், சூரியகுமார் யாதவ் தலைமையிலான அணியில் அவர் இடம் பெறவில்லை. அவரது உடற்தகுதியில் இந்திய அணி தேர்வாளர்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
டி20 போட்டிகள் அவருக்கு பொருத்தமாக இல்லை என்பததற்கு அவரது 11 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு சான்றாகும். இதுவரை அவர் ஆடிய 23 போட்டிகளில் 24 விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். மேலும், ஓவருக்கு 9 ரன் வீதம் அவர் விட்டுக் கொடுத்துள்ளார். அதனால் அவரைக் கொண்டு ரிஸ்க் எடுக்க கம்பீர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால், ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி டி20 மற்றும் விஜய் ஹசாரே டிராபி என முடிவடைந்த மூன்று உள்நாட்டு போட்டிகளிலும் பெங்கால் அணிக்காக ஷமி ஆடி தனது உடற்தகுதியை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.