இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் அதிரடி வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் டி-20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்த நிலையில், அந்த பதவியில் கம்பீரை ஜூலை 9 ஆம் தேதி அன்று பி.சி.சி.ஐ நியமித்தது.
கம்பீர் தலைமையிலான இந்திய அணி முதன் முதலாக இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் செய்தது. முதலில் ஆடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3- 0 என்கிற கணக்கில் கைப்பற்றி மிரட்டி இருந்தது. இந்த தொடருக்கான இந்திய அணியை சூரியகுமார் கேப்டனாக வழிநடத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கிய நிலையில், இத்தொடரில் பயிற்சியாளர் கம்பீர் எப்படி செயல்படுவார் என்றும், டி20 தொடரைப் போலவே இலங்கையை இந்தியா வாஷ் -அவுட் அடிக்க உதவுவாரா? என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், முதல் போட்டியை டிரா செய்த இந்திய அணி அடுத்த 2 போட்டியையும் இலங்கையிடம் பறிகொடுத்தது. இதனால் 2-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்த இலங்கை 27 வருடங்களுக்குப் பின் இருதரப்பு தொடரில் இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்தது.
இந்தியாவின் இந்தத் தோல்வியை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் நேரடியாக பயிற்சியாளர் கம்பீரை கடுமையாக சாடினர். அவர் குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகின. இருப்பினும், அவரது பயிற்சி பாணியைப் பற்றி முன்னாள் இந்திய வீரர்கள் யாரும் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கவில்லை. கம்பீர் தனது ஆரம்ப நாட்களில் இருப்பதால் அவர் அவர்களின் விமர்சனத்தில் இருந்து சற்று விலகி இருந்தார்.
பந்துவீச்சு பயிற்சியாளர் யார்?
இதுஒருபுமிருக்க, இலங்கை தொடருக்கு முன்னதாக இந்திய அணி துணை பயிற்சியாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டனர். இந்திய அணியில் இப்படி ஒரு பதவி முன்னதாக இல்லாத நிலையில், கம்பீரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த இருவரும் ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் (கே.கே.ஆர்) கம்பீருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். அதனால், அவர்களை தனது உதவிக்கு அழைத்துக் கொண்டார் கம்பீர்.
இருப்பினும், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? என்கிற கேள்வி மட்டும் தொற்றிக் கொண்டு இருந்தது. இலங்கை தொடருக்கு முன்னதாக இந்தக் கேள்வி விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட, சற்று தாமதமாக தற்போது கிடைத்து விட்டது. ஆனால், இந்த விவகாரம் பற்றி பரபரப்பாக பேசப்பட்ட போது, இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் இந்திய வீரர்கள் வினய் குமார், ஜாகீர்கான், தமிழகத்தின் எல்.பாலாஜி ஆகியோரை பி.சி.சி.ஐ பரிசீலனை செய்வதாக கூறப்பட்டது.
நியமனம்
எனினும், இந்தியாவின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலைத் தான் நியமிக்க வேண்டும் என தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பி.சி.சி.ஐ-யிடம் அடம் பிடித்ததாக கூறப்பட்டது. அதன்படியே, தற்போது இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரது ஒப்பந்தம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்றும் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா கிரிக்பஸ்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், செப்டம்பர் 19-ம் தேதி சென்னையில் தொடங்கி நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முதல் அவர் பொறுப்பு ஏற்றுக்கொள்வார் என்றும் கூறியுள்ளார்.
மோர்கல், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக இந்திய அணியில் சேர முடியவில்லை. அதனால், 6 ஒயிட்-பால் போட்டிகளுக்கு சாய்ராஜ் பஹுதுலே இடைக்கால பயிற்சியாளராக பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவம்
பந்துவீச்சு பயிற்சியாளராக நிறைவான அனுபவம் கொண்ட மோர்னே மோர்கல், கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான (பி.சி.பி) ஒப்பந்தம் முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பே தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
கவுதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் ஆகிய இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஐ.பி.எல் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக பணிபுரிந்துள்ளனர். லக்னோ அணியின் ஆலோசராக கம்பீர் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி நிலையில், அப்போது தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் கீழ் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்கல் செயல்பட்டார். தற்போது புதிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் கீழ் மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக தொடர்ந்து இருந்தார்.
மோர்கல் 2006 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமமான நிலையில் கடந்த 2018-ல் தனது ஓய்வை அறிவித்தார். அவர் 86 டெஸ்ட் போட்டிகளில் 8550 ரன்கள் மற்றும் 309 விக்கெட்டையும், 117 ஒருநாள் போட்டிகளில் 4761 ரன்கள் மற்றும் 188 விக்கெட்டையும், 44 டி20 போட்டிகளில் 1191 ரன்கள் மற்றும் 47 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட அணிகளுக்காக 70 போட்டிகளில் ஆடி 2089 ரன்கள் மற்றும் 77 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.