தென்னாப்பிரிக்காவின் 6.4 அடி உயர வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரும், ஆல் ரவுண்டர் அல்பி மோர்கலின் சகோதரருமான மோர்னே மோர்கல், நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். 33 வயதான மோர்கல் நேற்று (பிப்.26) தனது ஓய்வு முடிவை பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து மோர்னே மோர்கல் கூறுகையில், "இது மிகவும் கடுமையான ஒரு முடிவு. எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. மனைவி வெளிநாட்டைச் சேர்ந்தவர். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு தொடர் சுற்றுப்பயண அட்டவணை, எங்களுக்கு அதிக கஷ்டத்தைக் கொடுக்கிறது. இப்போது நான் அவர்களுக்கே முக்கியத்துவம் தர விரும்புகிறேன். இதனால் தான் ஓய்வு முடிவை எடுத்துள்ளேன்.
தென்னப்பிரிக்காவுக்காக விளையாடுவது எப்போதும் மிகவும் சிறந்தது. ஆனால், குடும்பம் தான் இப்போது முக்கியமாகிறது. என்னுடைய மனைவியும், குழந்தையும் கடந்த 10 வாரங்களாக என்னை பிரிந்து இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த என் மனைவியின் பணி நிமித்தமாக நாங்கள் இவ்வாறு பிரிந்து இருக்கிறோம். இது என்னை மிகவும் சோதிக்கிறது. இதையெல்லாம் யோசித்தே, குடும்பத்தினருடன் உட்கார்ந்து, நானும், எனது குடும்பமும் ஒருசேர இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளோம். என் வாழ்வின் புதிய சகாப்தத்தை, என் குடும்பத்துக்காக தொடங்கப் போகிறேன்.
அதேசமயம், நான் இப்போது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிறப்பாகவே இருப்பதாக உணர்கிறேன். எனவே, மற்ற கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவேன். விரைவில் தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்வது குறித்தே எனது 100% சிந்தனை உள்ளது" என்றார்.
இதுவரை 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மோர்னே மோர்கல், 294 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இன்னும் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினால், 300 டெஸ்ட் விக்கெட் கிளப்பில் இணைந்துவிடுவார். இதுவரை 117 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள மோர்கல், 188 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வந்த மோர்கல், நடந்து முடிந்த இந்திய அணிக்கெதிரான தொடரில் மொத்தமாக ஃபெயிலராகிப் போனார். டெஸ்ட் தொடரில் கூட, அவரால் ஜொலிக்க முடியவில்லை. உயரத்தில் அவர் தலை தனியாக தெரிந்தாலும், விக்கெட் வேட்டையில் தலை கவிழ்ந்தது.
அணிக்கு அவரால் பெரும் பங்களிப்பு கொடுக்க முடியவில்லை. அதேசமயம், புதிய வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடியின் வருகையும், அவரது சிறப்பான பெர்ஃபாமன்ஸுமே மோர்னே மோர்கலின் ஓய்வு முடிவுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.