Ruturaj Gaikwad - Maharashtra Premier League 2023 Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று முடிந்த 16வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. அடுத்தாக உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நாளை முதல் தொடங்குகிறது. இந்தியாவில் உள்ளூர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் 7வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 12 தொடங்குகிறது. இதேபோல், மகாராஷ்டிரா பிரீமியர் லீக் (எம்.பி.எல்) தொடங்க உள்ளது .
இந்த தொடரில், புனே, கோலாப்பூர், நாசிக், சம்பாஜிநகர், ரத்னகிரி, சோலாப்பூர் ஆகிய 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில், புனே அணிக்கு கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். கோலாப்பூர் அணிக்கு கேதர் ஜாதவ், நாசிக் அணிக்கு ராகுல் திரிபாதி, சம்பாஜிநகர் அணிக்கு ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரத்னகிரி அணிக்கு அசிம் காசி மற்றும் சோலாப்பூர் அணிக்கு விக்கி ஓஸ்ட்வால் ஆகியோர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடர் குறித்து மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் ரோஹித் பவார் பேசுகையில், "எம்.பி.எல் தொடர் புனேயின் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வரும் ஜூன் 15 ஆம் தேதி தொடங்குகிறது. அணிகளுக்கான உரிமையாளர் ஏலத்தில் கிரிக்கெட் சங்கத்திற்கு 20க்கும் அதிகமான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த 6 அணிகளின் விற்பனை மூலமாக ரூ.18 கோடி வரையில் கிரிக்கெட் சங்கம் எதிர்பார்த்தது. ஆனால், அதைவிட 3 மடங்கு அதிகம் கிடைத்தது.
இந்த 6 எம்பிஎல் அணிகள் ஒவ்வொன்றிற்கும் 3 ஆண்டுகளுக்கு ரூ.1 கோடி வரையில் அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளோம். இன்று 6 அணிகளுக்கான ஏலம் விடப்பட்ட நிலையில், ரூ.57.80 கோடி வரையில் பெற்றுள்ளோம். டி.டி ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆன்லைன் மூலமாக போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.
புனே அணியின் உரிமையை பிரவின் மசலேவாலே வசப்படுத்திய நிலையில், அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை புனே அணி ரூ.14.8 கோடிக்கு வாங்கியுள்ளது. இதேபோல் கேதர் ஜாதவ்விற்கு ரூ.11 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு ரூ.8.7 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.