இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சி.எஸ்.கே அணியின் கேப்டனுமான எம்.எஸ் தோனி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புகழ் பெற்ற கேப்டனாக முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி திகழ்ந்து வருகிறார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பை, 2011 50 ஓவர் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என்று அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளது. இந்திய அணியை தோனி வழிநடத்திய ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலம் என்று கூறினால் கூட மிகையாகாது.
Advertisment
சமீபத்தில் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த போது பலரும் தோனியை பற்றி பேசி சிலாகித்தார்கள். ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீண்ட காலமாக அவர் வழிநடத்தி வரும் நிலையில், அவரது தலைமையிலான சென்னை அணி நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத்தை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் கடந்தும், இன்றும் அவர் மீதான அன்பும் பிணைப்பும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. சொல்லப்போனால் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட சென்னை அணி விளையாடிய மைதானங்களில் எல்லாம் ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சி அணிந்து தோனியை வரவேற்றனர். அந்த அளவிற்கு தோனியின் மீது ரசிகர்கள் அன்பை பொழிந்து வருகிறார்கள்.
Advertisment
Advertisements
77 அடி உயர கட் அவுட்
இந்நிலையில், தோனி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். காயத்தில் இருந்து குணமடைந்து வரும் அவர், குடும்பத்துடன் நேரம் செலவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஐதராபாத்தில் தோனிக்கு 77 அடி உயர கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தோனி அந்த கட் அவுட்டில் சென்னை அணியின் ஜெர்சியில் உள்ளார். அவருக்கு பாலபிஷேகம் செய்யும் போது ரசிகர்கள் 'ஜெய் தோனி… ஜெய் தோனி…' என்று ஆர்ப்பரிக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.