scorecardresearch

தோனி – ஜடேஜா மோதல்: இணையத்தில் வதந்தி பரவி வருவது ஏன்?

குஜராத் அணிக்கு எதிராக ஜடேஜா பந்துவீச்சில் கலக்கியபோது, அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார் கேப்டன் தோனி.

MS Dhoni and Ravindra Jadeja rift, Why rumors doing the rounds Tamil News
MS Dhoni and Ravindra Jadeja

IPL 2023 – MS Dhoni – Ravindra Jadeja Tamil News: கடந்த சில நாட்களாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும், நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது தோனி – ஜடேஜா இடையே லேசான வாக்குவாதம் நடந்ததும், அதன்பிறகு ஜடேஜா வெளியிட்ட ட்விட்டர் பதிவும் இணையத்தில் வைரலாகியது.

வாக்குவாதம்

டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டி முடிந்த பிறகு கேப்டன் தோனியும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், எதற்காக இந்த வாக்குவாதம் நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. ஜடேஜாவிடம் தோனி கடுமையாக நடந்துகொண்டதாக கூறப்பட்டது.

இருப்பினும், சிலர் ஜடேஜா டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சில் சொதப்பி இருந்தார் என்றும் ஒரு விக்கெட் எடுத்தாலும் அவர் 4 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக்கொடுத்து இருந்தார் என்றும், குறிப்பாக, ஜடேஜாவின் பந்தில் டெல்லி கேப்டன் வார்னர் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்தார், அது கேப்டன் தோனியை நிச்சயம் அதிருப்தியடைய செய்திருக்கும். அதனால்தான் போட்டி முடிந்தப் பிறகு ஜடேஜாவிடம் பேசிய தோனி, ”விருப்பம் இல்லையென்றால், அணியை விட்டு விலகிவிடு.” என்றும் கூறினார்.

மேலும், இந்த சீசனில் நடந்த லீக் போட்டிகளின் போது, ஜடேஜா சீக்கிரம் அவுட் ஆகினால் தோனி என்ட்ரி கொடுப்பார் என்பதற்காக, ரசிகர்கள் தான் விளையாடும் போது சீக்கிரம் அவுட் ஆக வேண்டும் என பிராத்தனை செய்வதாகவும், அப்போது ‘தோனி, தோனி’ என ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்புவது தன்னை புண்படுத்தி விட்டன என்றும் ஜடேஜா அணி நிர்வாகத்திடம் கூறி இருக்கிறார். ஆனால் அதனையும் அணி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இந்த போட்டி முடிந்தப் பிறகு பேசிய தோனி, ”தனிப்பட்ட ரெக்கார்ட்டுக்கு விளையாடும் வீரர்கள் அணிக்கு தேவையில்லை. இந்த அணிக்காக ஆடும் வீரர்கள் மட்டும்தான் தேவை. ” என அதிரடியாக பேசியிருந்தார். இதன் மூலம் ஜடேஜாவை தான் தோனி குத்திக்காட்டி பேசினார் என்றும் என கருதப்பட்டது.

வைரல் பதிவு

இதனிடையே, ஜடேஜா தனது ட்விடட்டர் பதிவில், ‘இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ கர்மா நிச்சயம் திருப்பித் தரும்’ என்று பதிவிட்டுள்ளார். ஜடேஜாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் தோனியைக் குறிப்பிட்டு தான் இப்படி பதிவிட்டுள்ளார் என சிலர் கமெண்ட் செய்தனர். மேலும், தோனி அடிக்கடி குறிப்பிடும் ‘Definitely’ வார்த்தையை ஜடேஜா தனது கேப்சனில் குறிப்பிட்டுள்ளார் எனவும், அதனால் அவர் தோனியைத் தான் நிச்சயம் குறிப்பிடுகிறார் என்றும் சிலர் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, ஜடேஜா – தோனி இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக ரசிகர்கள் நினைத்ததை உறுதிபடுத்தும் விதமாக, ஜடேஜாவின் மனைவி ரிவாபா ரவீந்திரசிங் ஜடேஜாவும் சமூக ஊடகங்களில் தனது கணவரின் பதிவை ரீட்வீட் செய்து, “உங்கள் சொந்த பாதையை பின்பற்றுங்கள்..” என்று குறிப்பிட்டார். முக்கிய போட்டிக்கு முன்னர் இப்படியான செய்திகள் வெளியாகியது சென்னை அணியின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

வதந்தி பரவுவது ஏன்?

ஆனால், பலரும் கருதுவது போல் தோனி – ஜடேஜா இடையே எதுவும் நடக்கவில்லை. ஏனெனில், நேற்று செவ்வாய்க்கிழமை சென்னையில் நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த முதலாவது தகுதி சுற்று (குவாலிஃபயர் -1) ஆட்டத்தின் போது இருவரும் எப்போதும் போல் சகஜமாக பேசிக்கொண்டனர். தோனி பேட்டிங் செய்ய களம் புகுந்த போது, களத்தில் இருந்த ஜடேஜா தோனியின் பேட்டை தட்டி கொடுத்தார். இதேபோல், ஜடேஜா பவுண்டரி விளாசிய போது, தோனி அவருக்கு வாழ்த்து கூறுவது போல் பேட்டை தட்டிக்கொடுத்தார்.

இதேபோல், ஜடேஜா பந்துவீச்சில் கலக்கியபோது, அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். ஜடேஜா மில்லரை கிளீன் போல்ட் செய்தபோது கையை தட்டிக்கொடுத்து வாழ்த்து கூறினார் தோனி. இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜா, ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். ஜடேஜாவுக்கு தோனி எப்போதும் போல் ஆதரவு அளித்து வரும் நிலையில், அவர்களுக்கு இடையே மோதல், பிளவு மற்றும் கருத்து வேறுபாடு என்று கதை கட்டப்படுவது தவிடு பொடியாகியுள்ளது.

நேற்றை ஆட்டத்தில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி அடுத்ததாக, வருகிற ஞாயிற்று கிழமை அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் குவாலிஃபயர் -2ல் வெற்றியை ருசிக்கும் அணியுடன் மோதும்.

இன்று புதன்கிழமை (மே.24ம் தேதி) நடக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ms dhoni and ravindra jadeja rift why rumors doing the rounds tamil news