இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டனாக எம்.எஸ் தோனி திகழ்கிறார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என கோப்பைகளை வாங்கிக் குவித்தது. மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 3 ஃபார்மெட்டுகளிலும் கொடி கட்டி பறந்தது.
ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்திய தோனி, அந்த அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூட உதவினார். அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
பி.சி.சி.ஐ. ஐ.பி.எல் 2025 தொடருக்கான புதிய ஏல விதிமுறைகளை வெளியிட்ட நிலையில், அதில் அன்கேப்ட் வீரர் என்ற பழைய விதிமுறையை பி.சி.சி.ஐ. மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்த விதியை பயன்படுத்தி சென்னை அணி தோனியை அணிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த திட்டத்துக்கு தோனி இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. அது நடந்து விட்டால், தோனி மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்த தயாராகி விடுவார்.
தேர்தல் தூதராக தோனி
இந்நிலையில், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக ஜார்க்கண்ட் தேர்தல் ஆணைய அதிகாரி கே.ரவி குமார் பேசுகையில், "தோனி தனது புகைப்படத்தை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மற்ற விபரங்கள் குறித்து அவரிடம் தொடர்பு கொண்டுள்ளோம். வாக்காளர்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு மற்றும் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் பணியை தோனி செய்வார். இது அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வாக்காளர்களிடம் தூண்டும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெறவிருக்கும் நிலையில், சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
முதல்வர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ.க உள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. இதனால், ஜார்க்கண்ட் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“