தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை தலைமை இடமாக கொண்டு, டி20 லீக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐ.பி.எல் தொடர் மட்டுமல்லாது, எஸ்.ஏ 20 (தென் ஆப்ரிக்கா), மேஜர் லீக் கிரிக்கெட் (அமெரிக்கா) போன்ற முக்கிய டி20 லீக் கிரிக்கெட்டில் அணியை நிர்வகித்து வருகிறது.
அத்துடன் நிறுவிடாமல், சென்னை அணி பல்வேறு நாடுகளில் பயிற்சி மையங்களை திறந்து வருகிறது. இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலும் பயிற்சி மையம் ஒன்றை தொடங்க உள்ளது. இந்த பயிற்சி மையங்கல் மூலம் அந்தந்த நாடுகளில் உள்ள இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை அடையாளம் கண்டு, அதன்பின் ஐ.பி.எல் தொடரில் இணைக்க முடியும்.
ஆஸ்திரேலியாவில் எப்போதுமே அதிரடி பேட்ஸ்மன்களுக்கும், ஆக்ரோஷ பவுலர்களுக்கும் பஞ்சமே கிடையாது. இந்த சூழலில், சிட்னியில் பயிற்சி மையத்தை சி.எஸ்.கே அணி நிர்வாகம் திறப்பதன் மூலம் பல இளம் வீரர்களை கண்டெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்க முடியும். இது பல திறமையான வீரர்களை உருவாக்குவதற்கு உதவும். அதுமட்டுமல்லாமல் அவர்களை சி.எஸ்.கே அணிக்காக தேர்வு செய்யவும் வாய்ப்புகிடைக்கும். இதன் மூலம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பல திறமை வாய்ந்த, யாருக்கும் அறியப்படாத வெளிநாட்டு வீரர்களை சி.எஸ்.கே இந்த கிரிக்கெட் அகாடமி மூலம் கண்டெடுத்து தங்களுடைய அணிக்கு கொண்டு வர முடியும்.
இதுபோன்ற எதிர்கால திட்டங்கள் மூலம் சி.எஸ்.கே அணி அதன் பலத்தை மேலும் அதிகரிக்கக்கூடும். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள இளம் வீரர்களை தேர்வு செய்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சி.எஸ்.கே அணி அழைத்துச் சென்று அங்கு உள்ள தங்களது பயிற்சி மையத்தில் கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தும். இது சிறுவயதிலேயே இந்தியாவில் உள்ள வீரர்கள் வெளிநாடுகளில் சென்று பயிற்சி பெற்று அங்கு உள்ள ஆடுகளங்களில் விளையாடும் வாய்ப்பை பெற உதவும். இதனால், சி.எஸ்.கே-வின் இந்த முன்னெடுப்பு கிரிக்கெட் உலகில் பெரும் வியப்பாக பார்க்கப்படுகிறது. இதற்கான திட்டங்களை தீட்டியது ஜாம்பவான் வீரர் தோனி தான் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“