ஆஸ்கார் விருது பெற்ற தி எலிஃபண்ட் விஸ்பர்ஸ் படத்தில் நடித்த பொம்மன் மற்றும் பெல்லி தம்பதி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியை சந்தித்தனர்.
யானையை தங்களது பிள்ளை போல் பராமரித்து வரும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதி தொடர்பான வெளியான ஆவணப்படத்தை கார்த்திகி கான்செல்வஸ் இயக்கியிருந்தார். ஆஸ்கார் விருதுக்கு தேர்வான இந்த படம் சிறந்த ஆவண குறும்படம் என்ற பிரிவில் ஆஸ்கார் விருது பெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் முக்கிய கேரக்டர்களாக பொம்மன் பெல்லி தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதன் மூலம் தி எலி.ஃபெண்ட் விஸ்பர்ஸ் ஆவணப்படும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமான நிலையில், பொம்மன் பெல்லி தம்பதியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இதனிடையே பொம்மன் பெல்லி தம்பதி இன்று கிரி்க்கெட் வீரர் தோனியை நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பொம்மன் பெல்லி என்று பெயர் அச்சிடப்பட்டு 7 என்ற எண் பதித்த சிஎஸ்கே ஜெர்சியை பொம்மன் மற்றும் பெல்லி தம்பதிக்கு பரிசாக வழங்கினார். நேற்று (மே 9) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பயிற்சிக்குப் பிறகு நடந்த சிறப்பு நிகழ்வில் இந்த சந்திப்பு நடந்தது.
இதில் பொம்மன் பெல்லி தம்பதியுடன் தி எலிஃபெண்ட் விஸ்பர் படத்தை இயக்கிய திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் பங்கேற்றார். அவருக்கு தனிப்பட்ட முறையில் கேப்டன் தோனி சிஎஸ்கே ஜெர்சியை பரிசாக வழங்கினார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த ஆவணப்படத்தில், ரகு என்ற அனாதை குட்டி யானையை பராமரிக்கும் பொறுப்பு பொம்மன் பெல்லி தம்பதிக்கு ஒப்படைக்கப்படுகிறது.
அவர்கள் இருவரும் காயமடைந்த அந்த யாணையை தங்களது பிள்ளை போல் கவனித்து, வருகின்றனர். அவர்கள் காட்டிய அன்பினால் யானை மகிழ்ச்சியாக வளர்க்கியது. இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது இந்த ஜோடியின் போராட்டத்தையும் தியாகத்தையும் போற்றுவதாக அமைந்தது. மேலும் இந்த திரைப்படம் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை பற்றி விவரிக்கும் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதனுடன், அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் நினைவுப் பரிசுகளை வழங்குவார் என்று தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ள சிஎஸ்கே நிர்வாகம் முதுமலை புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு யானைகள் நலனுக்கான காசோலையையும் வழங்கவுள்ளது.
இது குறித்து சிஎஸ்கே நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாத ன் கூறுகையில், “எங்கள் யானைப் பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் பெல்லியை கார்த்திகியுடன் பாராட்டுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், அவர்களின் கதை இதயத்தைத் தூண்டும் வகையில் உள்ளது. நமது சொந்த மக்கள் உலக அரங்கை எட்டியிருப்பது நம் அனைவருக்கும் மிகவும் பெருமையான விஷயம். ஆசிய யானைகளைப் பாதுகாப்பது காலத்தின் தேவை. மேலும் அம்மு மற்றும் ரகு ஆகிய இரண்டு யானைகளின் வாழ்க்கைச் செலவுகளுக்கு பங்களிப்பதன் மூலம் எங்கள் ஆதரவை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“