Chennai Super Kings | IPL 2024 | CSK vs RCB | MS Dhoni: ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் நீண்ட கால கேப்டனாக திகழ்ந்து வருகிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவரது தலைமையிலான சி.எஸ்.கே அணி ஐ.பி.எல்-லில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடியுள்ளது.
கடந்த சீசனில் (ஐ.பி.எல் 2023) ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதன் கோட்டையான அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 -வது சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த சீசன் முழுதுமே தோனி முழங்கால் வலியுடன் விளையாடி வந்தார். பேட்டிங்கின் போது ரன் எடுக்க மிகவும் சிரமப்பட்டார்.
குஜராத் டைட்டன்சுக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து தோனி மும்பையில் தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன்பிறகு அவர் பங்கேற்ற பொதுநிகழ்ச்சியில் பேசுகையில், தனது காயம் முழுமையாக குணமடைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தோனி முழங்கால் காயத்தில் இருந்து நன்றாக குணமடைந்துள்ளார். அவர் தனது மறுவாழ்வு திட்டங்களுக்கு உட்பட்டு, பயிற்சியைத் தொடங்கியுள்ளார். அடுத்த ஐ.பி.எல் தொடங்கும் நேரத்தில், அவர் விளையாடுவதற்குத் தகுதியானவராக இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.
ஹெலிகாப்டர் ஷாட்டை பறக்கவிட்ட தோனி
17வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இந்த தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சி.எஸ்.கே மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்.பி.சி அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான 10 அணிகளும் தங்களது வீரர்களுடன் பயிற்சி அமர்வுகளை நடத்தி வருகின்றன. அவ்வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த கேப்டன் தோனி பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி வருகிறார். குறிப்பாக, அவரது ஐகானிக் ஷாட் என வர்ணயிக்கப்படும் 'ஹெலிகாப்டர்' ஷாட்டை விளாசி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கமெண்ட்டில் ரசிகர்கள் தோனியைப் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“