Chennai Super Kings | Ms Dhoni | IPL 2024: 17வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியாகிய நிலையில், சென்னையில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்.பி.சி அணியுடன் மல்லுக்கட்டுகிறது.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான 10 அணிகளும் தங்களது வீரர்களுடன் பயிற்சி அமர்வுகளை நடத்தி வருகின்றன. அவ்வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்ராஜ் கெய்க்வாட் உள்பட சில வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி சென்னை வந்தடைந்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை சென்னை அணி நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அவை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில், தோனி காரை விட்டு இறங்கி வர, அவருக்கு பின்னணியில் நடிகர் விஜய் நடித்த 'லியோ' பட பாடல் மற்றும் மாசான பி.ஜி.எம் ஒலிக்கிறது. இப்படத்தில் வரும் காட்சி அமைப்பையும் அமைத்து தோனிக்கு சி.எஸ்.கே-வின் சிங்கம் மாஸ்காட் வரவேற்பு கொடுக்கிறது. இதுவரை எந்தவொரு ஐ.பி.எல் அணியும் தங்களது கேப்டனுக்கு இப்படியொரு வரவேற்பை கொடுத்தது இல்லை என ரசிகர்கள் சி.எஸ்.கே-வை பாராட்டி வருகிறாரார்கள்.
வழக்கமாக ஐ.பி.எல். தொடர் தொடங்க ஒரு மாதம் இருக்கும் போதே தனது பயிற்சியைத் துவங்கி விடும் தோனி, இம்முறை 17 நாட்களுக்கு முன்பு தான் தனது அணி போட்டுள்ள முகாமில் இணைந்துள்ளார். சமீபத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் நடந்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் தனது மனைவியுடன் தோனி கலந்து கொண்டார். தோனி நேற்று சென்னைக்கு வருகை தந்த நிலையில், நாளை முதல் பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சி.எஸ்.கே அணி தனது போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மார்ச் 22 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை எதிர்கொள்கிறது. பின்னர் அவர்கள் கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதிய குஜராத் டைட்டன்ஸ் அணியை மார்ச் 26 ஆம் தேதி எதிர்கொள்வார்கள். இதன்பின்னர் மார்ச் 31 ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடுவதற்காக அவர்கள் டெல்லிக்குச் செல்கிறார்கள். சன் ரைசர்ஸ் அணியுடன் மோதுவதற்காக ஐதராபாத் பயணத்துடன் அவர்களின் முதல் கட்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்வார்கள்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: MS Dhoni links up with Chennai Super Kings ahead of IPL 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“