10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நாளை சனிக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025: MS Dhoni could lead Chennai Super Kings again on Saturday if Ruturaj Gaikwad doesn’t recover from injury
இந்த நிலையில், சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயத்திலிருந்து மீளவில்லை என்றால், நாளை சனிக்கிழமை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மீண்டும் வழிநடத்தலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில்,அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து கூடுதலாக பவுன்ஸ் ஆகி, சி.எஸ்.கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வலது முன்கையில் தாக்கியது. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது அவர் இந்த காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.
இந்தக் காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்காக பயிற்சி பெறவில்லை. இந்நிலையில், ருதுராஜ் வலைப் பயிற்சியில் எப்படி பேட்டிங் ஆடுகிறார் என்பதைப் பொறுத்து அவர் அணியில் சேருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சி.எஸ்.கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
“ஆமாம், இன்றைய பயிற்சியில் அவர் பேட்டிங் ஆட முயற்சிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அவருக்கு இன்னும் அந்த காயம் கொஞ்சம் வலிக்கிறது, ஆனால், அதிலிருந்து அவர் ஒவ்வொரு நாளும் முன்னேறி வருகிறார். எனவே, நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், நாளை (சனிக்கிழமை) அவர் நன்றாக இருப்பார் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், ”என்று மைக் ஹஸ்ஸி கூறினார்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், முன்னாள் கேப்டன் தோனி அணியை வழிநடத்த மீண்டும் கதவுகள் திறந்துள்ளன. தற்போது சென்னை அணி மூன்று போட்டிகளில் ஆடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று தடுமாறி வருகிறது. இந்த சூழலில், கேப்டன் ருதுராஜ் நாளை போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்றால், சென்னை அணியை வழிநடத்தப் போவது யார்? என்று கேட்டபோது, மைக் ஹஸ்ஸி, “உண்மையில் எனக்குத் தெரியவில்லை. நாங்கள் உண்மையில் அதைப் பற்றி அதிகம் யோசித்ததில்லை என்று நினைக்கிறேன். சரி, நான் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் ருதுராஜ் அதைப் பற்றி யோசித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஆனால், எங்களிடம் இளம் வீரர் ஒருவர் இருக்கிறார். அவர் ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருக்கிறார். ஒருவேளை அவர் சிறப்பாக செயல்பட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு இந்தப் ரோலில் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது, அதனால் அவர் அதைச் செய்யக்கூடும். ஆனால், உண்மையைச் சொன்னால், எனக்குத் தெரியவில்லை" என்று மைக் ஹஸ்ஸி தோனியைப் பற்றிப் பேசுகையில், அவரது பெயரைச் சொல்லாமல் கூறினார்.
சென்னை அணி ஏற்கனவே பேட்டிங்கில் சொதப்பி வரும் நிலையில், கேப்டன் ருதுராஜ் களமிறங்கவில்லை என்றால், அது சி.எஸ்.கே-வின் பேட்டிங்கை மேலும், பலவீனப்படுத்தும். இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும், அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 3-வது இடத்தில் பேட்டிங் செய்கிறார், அவர் மட்டும் தான் ஃபார்மில் இருக்கிறார்.
அவர் நாளை ஆடவில்லை என்றால், சி.எஸ்.கே தங்கள் ஆடும் லெவன் அணியில் பெரிய மாற்றத்தை கொண்டுவர கட்டாயத்திற்கு தள்ளப்படும். தொடக்க வீரர் ராகுல் திரிபாதி நல்ல ஃபார்மில் இல்லாத நிலையில், டெவன் கான்வேயை மீண்டும் அணியில் சேர்க்க சி.எஸ்.கே யோசித்து வருகிறது, அப்படியானால், ஜேமி ஓவர்டன் அல்லது மதீஷா பதிரானா ஆகிய இரண்டு வீரர்களில் ஒருவரை நீக்க வேண்டும். சென்னை அணிக்கு புதிய வரவாக வந்துள்ள அன்ஷுல் காம்போஜ் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். அவர் அணியில் சேர்க்கப்பட்டால், டெவான் கான்வேக்கு டாப் ஆடரில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.