தீபக் சாஹரிடம் சூடான தோனி: எத்தகைய இக்கட்டான சூழலிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பவர் மகேந்திரசிங் தோனி.
’கேப்டன் கூல்’ என அன்போடு அழைக்கப்படும் இவரின் தலைமையின் கீழ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல்-லில் விளையாடி வருகிறது.
இந்திய அணிக்கு விளையாடும் போது தனது அக்மார்க் கூல்னெஸ்ஸை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் தோனி, சி.எஸ்.கே-வுக்கு ஆடும் போது மட்டும் சற்று உக்கிரமாக இருப்பார். இருந்தாலும் கோலி அளவுக்கு எல்லாம் முகத்தில் கோபத்தைக் காட்ட மாட்டார்.
நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன், சென்னை அணி மோதியது. இதில் சி.எஸ்.கே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 160 ரன் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 161 ரன்னை இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணி, கடைசி 2 ஓவரில் 39 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது தீபக் சாஹர் பந்துவீச களம் இறக்கப்பட்டார்.
இந்த ஓவரில் தீபக் ரன்களை கட்டுப்படுத்தினால், கடைசி ஓவரில் சமாளித்து, எளிதாக தம் அணி வெற்றிபெறும் என்ற திட்டம் தோனிக்கு இருந்திருக்க வேண்டும்.
ஆனால், சாஹரோ தோனியின் திட்டத்திற்கு எதிராக பந்து வீசினார். அவர் வீசிய முதல் பந்து பாதியிலேயே கையில் இருந்து நழுவி, ஃபுல்டாஸ் பாலாக பேட்ஸ் மேனிடமிருந்து விலகி பவுண்டரியானது.
பந்து பேட்ஸ் மேனின் இடுப்புக்கு மேலே சென்றதால் 1 ரன் கொடுக்கப்பட்டு, மொத்தம் 5 ரன்கள் பஞ்சாப் அணிக்கு ஸ்கோர் ஏறியது. பின்னர் சஹார் போட்ட அடுத்த பந்தும் ‘நோ பால்’ ஆகி 2 ரன்னை எதிரணிக்கு பெற்றுத் தந்தது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த விக்கெட் கீப்பர் தோனி தனது பொறுமையை இழந்தார். நேராக வந்து சாஹரிடம் ’என்ன ஆச்சு, ஏன் இப்படி போடுற?’ என்ற தொனியில் ஏதோ கேட்க, அதற்கு பய பக்தியுடன் விளக்கமளிக்கிறார் சாஹர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்பயர் சற்று படபடப்புடன் அவர்களை நோக்கி வந்து, பின்வாங்கினார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தோனியின் அந்த அறிவுரைக்குப் பிறகு சிறப்பாக விளையாடிய சாஹர், 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.
பின்னர் 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது!