MS Dhoni and Deepak Chahar Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் எல்.ஜி.எம் (LETS GET MARRIED). இந்தப் படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
Advertisment
இந்த நிகழ்ச்சியில் தோனி பேசுகையில், "சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு ஒரு பெரிய விசில் அடிங்க. எனக்கு தமிழில் கெட்ட வார்த்தைகள் தெரியும் என்று என் மனைவி சொன்னார். ஆனால் எனக்கு தமிழில் கெட்ட வார்த்தைகள் தெரியாது. அதனால் நான் அவருக்கு எந்த தமிழ் கெட்ட வார்த்தைகளையும் சொல்லிக் கொடுத்தது இல்லை. ஆனால், எனக்கு மற்ற மொழிகளில் தெரியும்.
இங்கு உங்களில் எத்தனை பேர் திருமணம் செய்துள்ளீர்கள்? (தோனி கேள்வி எழுப்புகிறார்). திருமணம் செய்தவர்களுக்கு வீட்டில் பாஸ் யார் என்பது தெரியும். அதனால் ஒரு படம் தயாரிப்போம் என்று என் மனைவி சொன்னபோது, நான் விளையாட்டாக எடுத்துக்கொண்டேன்.
என்னுடைய முதல் டெஸ்ட் அறிமுகம் சென்னையில் தான் நடந்தது. என்னுடைய அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை இங்கு தான் எடுத்தேன். இப்போது என்னுடைய முதல் படம் தமிழில் தான் தயார் செய்கிறேன். சென்னை எப்போதும் எனக்கு மிகவும் நெருக்கமான ஊர். 2008ல் ஐ.பி.எல் தொடங்கிய போது நான் இந்த நகரத்தால் தத்தெடுக்கப்பட்டேன். எனவே, இம்மாநிலத்தின் மீதான எங்கள் பரஸ்பர அன்பின் காரணமாக நாங்கள் எங்கள் முதல் திரைப்படத்தை தமிழில் தயாரித்தோம்." என்று கூறினார்.
Advertisment
Advertisements
யோகி பாபு குறித்து தோனி பேசுகையில், "சி.எஸ்.கே அணியில் ராயுடு ஓய்வு பெற்று விட்டார். எனவே, அணியில் இப்போது எங்களுக்கு ஒரு இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தில் யோகி பாபுவை களமிறங்குவது குறித்து அணி நிர்வாகத்திடம் பேசுகிறேன். ஆனால் நீங்கள் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளீர்கள். நீங்கள் இங்கு தொடர்ந்து விளையாட வேண்டும். நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால், அவர்கள் மிக வேகமாக பந்து வீசுவார்கள். உங்களை காயப்படுத்தும் அளவுக்கு பந்து வீசுவார்கள்" என்றார்.
தொடர்ந்து அவர் தீபக் சஹார் குறித்து பேசுகையில், "அவருக்கான வார்த்தைகளை என்னால் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ஒரு போதைப்பொருள் போன்றவர். நம்முடன் இல்லாத போது, எங்கே போனார் என்று நினைக்கத் தோன்றும். நம்முடன் இருக்கும் போது அவர் ஏன் இங்கே இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றும்.
ஆனால் அவர் தற்போது முதிர்ச்சியடைந்து வருகிறார். அதற்கு நீண்ட காலமாகும். என்னுடைய மகள் ஜிவா இப்போது 8 வயதில் கொண்டுள்ள புத்திசாலித்தனத்தை அவர் 50 வயதில் பெற்று விடுவார்.
ஒயின் எப்படி நாளாக நாளாக சிறப்பாக இருக்கும் என்று கூறுவார்களோ, அதுபோலத் தான் அவரும். ஆனால் அந்த மதுவை என்னால் குடிக்க முடியாது, அவர் முதிர்ச்சியடைவதற்குள் எனக்கு வயதாகி விடும்." என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil