MS Dhoni: இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டன்களுள் முக்கியமானவராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி நடத்திய அனைத்து வடிவ போட்டிகளிலும் கோப்பைகளை வென்று சாதனையை படைத்துள்ளது.
இதேபோல், அவரது தலைமையிலான ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியுள்ளது. தற்போது 42 வயதான தோனி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த சீசன் தான் அவரது கடைசி சீசனாக இருக்கும் என ரசிகர்கள் பரபரப்பாக பேசியும் வருகிறார்கள்.
எம்.எஸ் தோனி பேச்சு
மகேந்திர சிங் தோனி எப்போதுமே தனது தலைமைத்துவ திறமைக்காகவும், இந்திய தேசிய அணியில் கேப்டனாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்த போது அவரது அமைதியான நடத்தைக்காக அறியப்படுகிறார். இந்நிலையில், துணை ஊழியர்கள் அல்லது வீரர்கள் உங்களை மதிக்காவிட்டால், அவர்களிடம் விசுவாசத்தைப் பெறுவது கடினம் என்றும், மரியாதையும் விசுவாசமும் கேப்டன் பதவியிலிருந்து கட்டளை போடுவதால் மட்டும் கிடைத்து விடாது என்றும் எம்.எஸ். தோனி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமீபத்திய நிகழ்ச்சியில் தோனி பேசுகையில், "விசுவாசம் என்பது மரியாதை என்ற காரணியுடன் நிறைய ஒத்துப்போகிறது. நீங்கள் டிரஸ்ஸிங் ரூமில் பேசும்போது, துணை ஊழியர்கள் அல்லது வீரர்கள் உங்களை மதிக்காவிட்டால், அவர்களிடம் விசுவாசத்தைப் பெறுவது கடினம். இது உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அல்ல. நீங்கள் உண்மையில் எதுவும் பேசாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் நடத்தைதான் மரியாதையை பெற்றுக்கொடுக்கும்.
எப்போதும் மரியாதையை சம்பாதிப்பது முக்கியம் என்று நான் கருதுவேன். ஏனெனில் அது உங்களுடைய நடத்தையுடன் வருகிறது. வீரர்கள் சில சமயங்களில் அழுத்தமான நிலையில் இருப்பார்கள். அதை சரி செய்ய அவர்கள் மீது கட்டளை செலுத்தக்கூடாது. சிலர் அழுத்தத்தை விரும்புவார்கள். சிலர் விரும்ப மாட்டார்கள். வீரர்கள் தங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வது அவசியம். இது ஒரு வீரர் தன்னை தன்னம்பிக்கையுடன் வைத்திருக்க உதவுகிறது.
மரியாதையும் விசுவாசமும் கேப்டன் பதவியிலிருந்து கட்டளை போடுவதால் மட்டும் கிடைத்து விடாது. மரியாதையை இயற்கையாக பெற வேண்டும். அந்த வகையில் ஒரு முறை நீங்கள் இயற்கையான விசுவாசத்தை உருவாக்கி விட்டால் பின்னர் நல்ல செயல்பாடுகள் தாமாக வரும்" என்று அவர் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: MS Dhoni on leadership
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“