இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டனாக எம்.எஸ் தோனி திகழ்கிறார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என கோப்பைகளை முத்தமிட்டு இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தது.
தோனி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த 2020 ஓய்வு பெற்ற நிலையில், அவர் ஐ.பி.எல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடியுள்ளது. தோனி கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தங்களுடைய முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை தக்க வைப்பதற்காக சென்னை அணி நிர்வாகம் பழைய விதிமுறையை மீண்டும் கொண்டு வருமாறு பி.சி.சி.ஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், தோனி விதிமுறை வகுக்கப்பட்ட பிறகு தான் அடுத்த சீசனில் ஆடுவது பற்றி யோசிக்கலாம் என்றும், எதுவாக இருந்தாலும் அணி தான் முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி விராட் கோலி உடனான தனது நட்பு குறித்து வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "நாங்கள் நீண்ட காலமாக இந்தியாவுக்காக விளையாடிய சக வீரர்களாக இருந்துள்ளோம். அவர் (கோலி) உலக கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சிறந்த வீர்களில் ஒருவர்.
மேலும் மிடில் ஓவர்களில் அவருடன் நான் நிறைய பேட்டிங் செய்ய முடிந்தது. உண்மையில் அது வேடிக்கையாக இருந்தது. ஏனென்றால் நாங்கள் ஆட்டத்தில் நிறைய இரண்டு மற்றும் மூன்று ரன்களை எடுப்போம். எனவே, அது எப்போதும் வேடிக்கையாக இருக்கும், ஆனால் நாங்கள் அடிக்கடி சந்திப்பது இல்லை. ஆனால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நாங்கள் பக்கத்தில் சென்று பேசிக் கொள்வதை உறுதிசெய்வோம். சில நேரம், நாங்கள் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பேசுவோம், அதுதான் எங்கள் உறவு" என்று தோனி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“