MS Dhoni: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்ட இந்தத் தொடரில் இன்று முதல் பிளே - ஆஃப் போட்டிகள் நடைபெற உள்ளன.
கடந்த 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Dhoni speaks: ‘No one gives you a discount for your age in professional sport’
இந்தப் போட்டிதான் தோனியின் கடைசி ஐ.பி.எல் என்ற கருத்து பரவி வரும் நிலையில், தோனி தனது எதிர்காலம் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை என்றும், ஐ.பி.எல் 2024 -க்குப் பிறகு தோனியின் திட்டங்கள் என்ன என்று அணி நிர்வாகமானது ஒருபோதும் கேட்கவில்லை என்றும் சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் சமீபத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
“அது பற்றி டிரஸ்ஸிங் ரூமில் எந்த விவாதமும் நடக்கவில்லை. அவருடைய எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் அவரிடம் கேட்கவில்லை, அதைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. அவர் ஒரு முடிவை எடுக்கும்போது, அவர் எங்களுக்குத் தெரிவிப்பார், அதுவரை நாங்கள் தலையிட மாட்டோம், ”என்று காசி விஸ்வநாதன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் சமீபத்திய வீடியோவில், தோனி தனது உடற்தகுதியை ஏன் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார் என்பதைப் பற்றி தெரிவித்துள்ளார்.
துபாய் ஐ 103.8 யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தோனி, "கடினமான விஷயம் என்னவென்றால்... வருடம் முழுவதும் நான் கிரிக்கெட் விளையாடுவதில்லை. அதனால் நான் ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம். நான் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் உடல் தகுதியுள்ள இளம் வீரர்களுக்கு எதிராக போட்டியிட வேண்டி உள்ளது. தொழில்முறை விளையாட்டு எளிதானது அல்ல. இங்கு உங்கள் வயதை பார்த்து எல்லாம் எந்த டிஸ்கவுன்டும் கொடுக்க மாட்டார்கள்.
நீங்கள் விளையாட விரும்பினால், நீங்கள் மற்ற வீரர்களை போலவே நீங்களும் பிட்டாக இருக்க வேண்டும். வயது உண்மையில் அந்த அருளை உங்களுக்கு வழங்காது. அதனால், உணவுப் பழக்கம், கொஞ்சம் பயிற்சி என்று எல்லாமே இருக்கிறது. சமூக ஊடகங்களைப் பொறுத்தவரையில், அதிர்ஷ்டவசமாக, நான் எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை, அதனால் கவனச்சிதறல் குறைவாக உள்ளது." என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த மே 2023 இல் முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தோனி ஐ.பி.எல்-லில் இந்த சீசனில் அனைத்து 14 சி.எஸ்.கே போட்டிகளிலும் விளையாடினார். அவர் 13 சிக்ஸர்கள் உட்பட 220.55 ஸ்ட்ரைக் ரேட்டில் 161 ரன்கள் எடுத்தார். சி.எஸ்.கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி ஆகியோர் தோனியிடம் பந்தை நீளமாகவும் கடினமாகவும் அடிக்கும் திறன் இன்னும் அப்படியே இருப்பதாகக் கூறினர். தோனியின் உடற்தகுதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று இருவரும் நம்புகிறார்கள்.
தோனி தனது தொழில்முறை வாழ்க்கையின் இந்த கட்டத்தில் தனது கவனத்தைத் தக்கவைக்க உதவும் விஷயங்களைப் பற்றியும் பேசினார். “சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நான் விலகியவுடன், எனது குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிட விரும்பினேன். ஆனால், அதே நேரத்தில், மனதளவில் சுறுசுறுப்பாக இருக்க, கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
என்னைப் பொறுத்தவரை, நான் விவசாயத்தை விரும்புகிறேன், எனக்கு மோட்டார் சைக்கிள்கள், நான் விண்டேஜ் கார்களில் பயணிக்க ஆரம்பித்தேன். இந்த விஷயங்கள் எனக்கு மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. மன அழுத்தமாக இருந்தால், நான் கேரேஜுக்குச் சென்று, ஓரிரு மணி நேரம் அங்கேயே செலவழித்துவிட்டு நான் திரும்பி வருவேன். அப்போது நான் நன்றாக இருப்பேன்.
நான் எப்போதும் ஒரு செல்லப் பிராணியுடன் வளர்வதை உணர்ந்திருக்கிறேன், அது பூனையாக இருந்தாலும் சரி நாயாக இருந்தாலும் சரி... நான் நாய்களையே விரும்புகிறேன். அவைகள் உங்கள் மீது எல்லையற்ற அன்பு கொண்டுள்ளன. நான் ஒரு ஆட்டத்தில் தோற்று திரும்பி வந்தாலும், என் நாய் என்னை அப்படியே வரவேற்கும் என்று முந்தைய பேட்டியில் சொல்லியிருக்கிறேன்." என்று அவர் கூறினார்.
அந்த வீடியோவில் தோனி தலைமைப் பண்பு குறித்தும் பேசியுள்ளார். "தலைமையைப் பற்றி பேசும்போது முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் வழிநடத்தும் நபர்களின் மரியாதையை நீங்கள் பெற வேண்டும். மரியாதையை கட்டளையிட்டு பெறவோ அல்லது மரியாதை வேண்டும் எனக் கோரவோ முடியாது. நீங்கள் அதை சம்பாதிக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தில் எனக்கு ஒரு பதவி இருக்கலாம், ஆம் அந்த நிலை மதிக்கப்பட வேண்டும். ஆனால் நாற்காலியில் அமர்ந்திருக்கும் தனி மனிதனாக அந்த மரியாதையை நான் பெற வேண்டும். ‘என்னை மதிக்கவும்’ என்று மட்டும் என்னால் சொல்ல முடியாது. உங்களைச் சுற்றியுள்ளவர்களின் மரியாதை உங்களுக்கு இருந்தால், அவர்கள் 10 முதல் 15 சதவிகிதம் அதிகமாகக் கொடுக்கிறார்கள்.
இந்தியா சற்று வித்தியாசமானது. மக்கள் தொழில்முறை பற்றி பேசுகிறார்கள். ஆம், இந்தியர்களாகிய நாம் தொழில் வல்லுநர்கள், ஆனால் நம்முடைய உணர்வுபூர்வமான தொடர்பு வலுவானது. நான் ஒரு இந்தியனாக உணர்கிறேன், எனது பலத்திற்கு உணர்வுபூர்வமான இணைப்பு உள்ளது. சி.எஸ்.கே உடனான எனது தொடர்பு உணர்வுபூர்வமானது. நான் இரண்டு மாதங்கள் வந்து விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பும் வீரர் மட்டுமல்ல." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.