'எஞ்சிய ஆண்டுகளை குழந்தையைப் போல அனுபவிக்க விருப்பம்': எம்.எஸ் தோனி பேட்டி

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எஞ்சிய ஆண்டுகளை ஒரு குழந்தையைப் போல அனுபவிக்க விரும்புவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MS Dhoni remaining years in cricket career enjoy child Tamil News

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எஞ்சிய ஆண்டுகளை ஒரு குழந்தையைப் போல அனுபவிக்க விரும்புவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டனாக எம்.எஸ் தோனி திகழ்கிறார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என கோப்பைகளை வாங்கிக் குவித்தது. மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 3 ஃபார்மெட்டுகளிலும் கொடி கட்டி பறந்தது.  

Advertisment

ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்திய தோனி, அந்த அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூட உதவினார். அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 

தோனி  ஐ.பி.எல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறப் போகிறார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் ஐ.பி.எல் 2025 தொடரில் களமாட ஆயத்தமாகி வருகிறார். பி.சி.சி.ஐ அதன் புதிய ஏல விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டு, அன்கேப்ட் வீரர் என்ற பழைய விதிமுறையை மீண்டும் கொண்டு வந்தது. இந்த விதியை பயன்படுத்தி சென்னை அணி தோனியை மெகா ஏலத்திற்கு முன்பாக தக்கவைத்துக் கொண்டது. இதனால், அவர் அடுத்த 3 சீசன்களில் ஆடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment
Advertisements

தோனி பேட்டி 

இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எஞ்சிய ஆண்டுகளை ஒரு குழந்தையைப் போல அனுபவிக்க விரும்புவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தோனி இன்று புதன்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,  "நான் 2019-ல் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். அது கொஞ்ச நாள் ஆகி விட்டது.  இதற்கிடையில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், என்னால் முடிந்தவரை விளையாடி வருகிறேன். இன்னும் சில ஆண்டுகள் என்னால் விளையாட முடியும். 

நான் அதை அனுபவிக்க விளையாட விரும்புகிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது சிறுவயதில் எப்படி இருந்தேனோ அதுபோல் ரசித்து ஆட விரும்புகிறேன். நான் காலனியில் வசித்தபோது, மதியம் ​​4 மணிக்கு விளையாட்டு நேரம், அதனால் நாங்கள் அடிக்கடி சென்று கிரிக்கெட் விளையாடுவோம்.

வானிலை அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் கால்பந்து விளையாடுவோம். நான் அதே வகையான அப்பாவித்தனத்துடன் விளையாட விரும்புகிறேன். இதை சொல்வதற்கு எளிமையாக இருக்கும். ஆனால், நடைமுறையில் கடினம். 

ஒரு கிரிக்கெட் வீரராக என்னைப் பொறுத்தவரை, நான் எப்போதும் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட விரும்பினேன். ஏனெனில் கடந்த காலங்களில், அனைவருக்கும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்காது என்று நான் கூறியுள்ளேன். 

கிரிக்கட் வீரர்களாகிய எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பெரிய அரங்கிற்குச் செல்லும் போதெல்லாம் அல்லது நாங்கள் சுற்றுப்பயணம் செய்யும் போதெல்லாம், நாட்டிற்காக கோப்பைகளை வெல்ல எங்களுக்கு வாய்ப்பு இருந்தது, எனவே என்னைப் பொறுத்தவரை, சொந்த நாடு தான் எப்போதும் முதலிடம் வகிக்கும்.  

உங்களுக்கு எது நல்லது என்பதை நீங்கள் எப்போதும் கண்டுபிடிக்க வேண்டும். நான் விளையாடும் போது, ​​கிரிக்கெட் எனக்கு முழுமையாய் இருப்பதை உறுதி செய்தேன். வேறு எதுவும் முக்கியமில்லை என்று நினைத்தேன். நான் எத்தனை மணிக்கு தூங்க வேண்டும்? நான் எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும்? அது எனது கிரிக்கெட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுதான் மிக முக்கியமான விஷயம்.

மற்ற எல்லா நட்புகளும், வேடிக்கைகளும், அனைத்தும் பின்னர் நிகழலாம் என்று உங்களுக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் சரியான நேரம் இருக்கிறது, அதை உங்களால் அடையாளம் காண முடிந்தால், அதுவே நீங்கள் உங்களுக்காக செய்யக்கூடிய சிறந்த விஷயம்." என்று அவர் கூறியுள்ளார். 

Chennai Super Kings Indian Cricket Team Ms Dhoni

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: