நாளை 3-வது ஒருநாள் போட்டியில் விளையாட ஜார்கண்ட் சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு, மண்ணின் மைந்தரான டோனியும், அவரது மனைவி சாக்ஷியும் அசத்தல் வரவேற்பு கொடுத்தனர்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி 20 தொடரை 0-2 என இழந்த இந்திய அணி, ஒருநாள் போட்டித் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3-வது ஆட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடக்கிறது. இது முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோனியின் சொந்த ஊர்.
3-வது போட்டியில் ஆடுவதற்காக ராஞ்சி சென்ற இந்திய வீரர்களுக்கு புதன்கிழமை மாலை டோனியும், அவரது மனைவி சாக்ஷியும் பல்வேறு வகை உணவு பதார்த்தங்களுடன் அசத்தல் டின்னர் கொடுத்தனர்.
இது தொடர்பான புகைப்படங்களை கேப்டன் விராட் கோலி, சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து டோனிக்கும், சாக்ஷிக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு டோனி முக்கிய பங்காற்றினார். அவரது சொந்த ஊரில் அவரது ஆட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே மொத்த அணியையும் தனது விருந்தோம்பலால் உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள் டோனி - சாக்ஷி தம்பதியர்.
ராஞ்சி மைதானத்தில் ஒரு பகுதி இருக்கைக்கு எம்.எஸ்.டோனி பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு நிகழ்ச்சிக்கு ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் சார்பில் டோனியை அழைத்தனர். ஆனால், ‘நான் இந்த மைதானத்தின் ஒரு அங்கம். யாராவது சொந்த வீட்டை அவர்களே திறந்து வைப்பார்களா?’ எனக் கூறி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை டோனி தவிர்த்துவிட்டார். ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்தினர் இந்த தகவலை நெகிழ்வுடன் பகிர்ந்தனர்.