துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் ப்ளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. நீண்ட நாள்களாக தோனியின் அதிரடி ஆட்டத்தைப் பார்க்க முடியாமல் தவித்து வந்த ரசிகர்களுக்கு, நேற்றைய மேடச் செம ட்ரீட்டாக அமைந்தது. தோனி 6 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி உள்ளிட்ட 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட், அவரின் பேட்டிங் குறித்த விமர்சனத்துக்குச் சரியான பதிலடியாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் 9ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, ” வலைப்பயிற்சிகளில் நான் நன்றாகவே பேட் செய்தேன். ஆனால் நான் நிறைய யோசிப்பதில்லை, பேட்டிங் செய்யும் போது அதிகமாக யோசித்தால், உங்கள் திட்டங்கள் குழப்பமடையும். இந்த மேட்ச் முக்கியமானதாக இருந்தது. டெல்லி அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளதால், மேட்ச் கடினமாக இருக்கும் என்பதை நன்கு அறிவோம்.இந்தத் தொடரில் நான் பெரிதாக எதையும் செய்து விடவில்லை. என் திட்டம் ரொபம் சிம்பிள். பந்தை பாக்கனும் அடிக்கனும் அவ்வளவு தான்.
ருதுராஜ் பேட்டிங் திறன் முன்னேறியுள்ளதை பார்க்க நன்றாக இருக்கிறது. . அவர் 20 ஓவரும் பேட்டிங் செய்ய விரும்பும் நபர் ஆவர். ஷர்தூல் தாகூர் பேட்டிங் நன்கு ஆடக்கூடியவர். அவரை டாப் ஆர்டரில் அனுப்புவதன் மூலம், குறைந்த பந்துகளில் ரன்களை எடுத்திட திட்டமிட்டிருந்தோம். மற்ற வீரர்களைப் போல் அல்லாமல் முதல் பந்திலே பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்பவர்.

ராபின் டாப் ஆர்டரில் சிறப்பாக ஆடினார். ஆனால், நம்பர் 3 பிளேசில் மோயின் அலி அதிரடியாக விளையாடக்கூடியவர். போட்டியின் நிலைமை குறித்து அவர்கள் இருவரில் யார் களமிறக்கப்படுவார்கள் என முடிவெடுக்கப்படும்.
கடந்த சீசனில் தான், முதன்முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறமுடியவில்லை. ஆனால் கடந்த சீசனில் கடைசி 3-4 போட்டிகளை நன்றாகப் பயன்படுத்தினோம். எங்கள் வீரர்கள் , நன்றாக பேட்டிங் செய்தனர். அதன் பலனாக, இந்த முறை வலுவாக திரும்பி வந்திருக்கிறோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட், ” இது மிகவும் வருத்தமளிக்கிறது. தற்போதைய மனநிலையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. டாம் கரன் முந்தைய ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியதாலே, அவருக்கு கடைசி ஓவர் வழங்கப்பட்டது. நாங்கள் எங்கள் தவறுகளைக் கண்டறிந்து, அதனைத் திருத்திக்கொண்டு, அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குச் செல்வோம் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil