ஜெயந்தி குப்தா தோனியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கௌதம் குப்தாவை மணந்தார்.
MS Dhoni sister Jayanti Gupta Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டன்களுள் முக்கியமானவராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி நடத்திய அனைத்து வடிவ போட்டிகளிலும் கோப்பைகளை வென்று சாதனையை படைத்துள்ளது. இதேபோல், ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூட்டியுள்ளது.
Advertisment
தோனியின் சகோதரி ஜெயந்தி குப்தா
இந்நிலையில், 42 வயதான தோனியின் இன்றைய சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் பிறக்கும் போதே கோடீஸ்வரர் கிடையாது. நம்மில் பலரைப் போல அவரும் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர் தான். அவரது தந்தை பான் சிங் நடுத்தர அளவிலான அரசு வேலையில் தான் பணிபுரிந்தார். அவரைப் போல் தோனியும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ரயிவேயில் பணிக்கு சேர்ந்து வேலை செய்தார்.
எனினும், இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆட வேண்டும் என்கிற கனவை மட்டும் துரத்தி கொண்டே இருந்தார். இந்த கனவு அவருக்கு 23 டிசம்பர் 2004 அன்று நனவானது. அவர் வங்கதேச அணிக்கு எதிராக சிட்டகாங்கில் நடந்த சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதன்பிறகு பல இக்கட்டான சூழல்களை கடந்து, இன்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். அவரது கனவை துரத்த அவருக்கு நண்பர்கள் உட்பட பலரும் உதவியிருப்பார்கள். ஆனால். இன்னொரு ஸ்பெஷலான நபரும் அவரது கிரிக்கெட் பயணத்தில் உண்டு. அவர் அவருடைய சகோதரி ஜெயந்தி குப்தா தான்.
தோனியின் மூத்த சகோதரியான ஜெயந்தி குப்தா, அவருக்கு இருந்த கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவித்தார். எப்போதும் அவருக்கு ஆதரவாக இருந்தார். தந்தை பான் சிங்கிற்கு தோனி கிரிக்கெட் விளையாட நம்பிக்கை இல்லாத போது தோனிக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்தார். தோனி இன்று உலகமறியும் பிரபலமாக இருந்து வரும் நிலையில், அவரது சகோதரி ஊடகங்களிலிருந்து விலகி இருக்கவே முயற்சிக்கிறார். தற்போது அவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
ஜெயந்தி குப்தா தோனியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கௌதம் குப்தாவை மணந்தார்.
ஜெயந்தி குப்தா தோனியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கௌதம் குப்தாவை மணந்துள்ளார். கௌதம் குப்தா, ஆரம்பகாலத்தில் தோனிக்கு மாநில மற்றும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உதவியாக இருந்தார். இன்றும் அவர்கள் தோனியுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil