இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களாக எம்.எஸ் தோனி, விராட் கோலி வலம் வருகிறார்கள். முன்னாள் கேப்டன்களான இவர்கள், உலக கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு என தனி இடமும், மரியாதையும் கிடைக்க பெரும் பங்காற்றியுள்ளனர். தோனி தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2023 சாம்பியன்ஸ் டிராபி என கோப்பைகளை அடுக்கி இருக்கிறது. அதேநேரத்தில், கோலி தலைமையிலான இந்திய அணி பெரிய அளவில் கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும், சர்வதேச கிரிக்கெட்டில் திறமையான அணியாக இந்தியாவை நிலை நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து, ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் களமாடி வருகிறார். அவரது தலைமையிலான சி.எஸ்.கே 5 முறை ஐ.பி.எல் கோப்பையை முத்தமிட்டுள்ளது. கோலி சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் இந்திய ஒருநாள் அணிக்காக மட்டும் ஆடுவார். இந்த ஆண்டு நடைபெற்ற 18-வது ஐ.பி.எல் தொடரில் கோலி ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பை கனவை நனவாக்கியது.
இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக எம்.எஸ் தோனி சென்னை வருகை தந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் தனது சக வீரரான விராட் கோலி குறித்து கேட்கப்பட்டது. அப்போது மனம் திறந்து பேசிய முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனி, "விராட் கோலி சிறப்பாக பாடுவார், நாடமாடுவார். அதை விடச் சிறப்பாக மிமிக்கிரி செய்வார். அவர் ஜாலியாக இருக்கும்போது அனைவரையும் ஜாலியாக்கி விடுவார்." என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, தோனியின் வயதைக் கருத்தில் கொண்டு, சி.எஸ்.கே-வுடனான அவரது எதிர்காலம் குறித்தும் கேட்கப்பட்டது. அப்போது அவர் தான் சி.எஸ்.கே-வை விட்டு எங்கும் செல்லப் போவதில்லை என்று கூறியுள்ளார். "நான் சி.எஸ்.கே-வுடன் இருந்து இணைந்து செயல்பட்டு வருவது பற்றி உங்களுக்குத் தெரியும். அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு கூட நான் இந்த அணியுடன் இணைந்திருப்பேன்.
நான் இன்னும் 15-20 ஆண்டுகளுக்கு விளையாடுவேன் என்று அவர்கள் நினைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஆனால், இது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் விளையாடுவதைப் பற்றி அல்ல. நான் எப்போதும் மஞ்சள் ஜெர்சியில் அமர்ந்திருப்பேன். நான் சிறிது காலம் விளையாடுவேனா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும். ஆமாம், அதை நீங்களே அறிவீர்கள்" என்று அவர் கூறியுள்ளார்.