நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தோனி பேட்டிங்கில் சொதப்பினாலும், தேசியக் கொடியை தாங்கிப் பிடித்து ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான இறுதி டி20 போட்டி, ஹாமில்டனில் நேற்று(பிப்.10) நடைபெற்றது. இதில், நியூசிலாந்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்று, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
213 எனும் மெகா இலக்கை துரத்திய இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து தோற்றது. இதில் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினாலும், மிடில் ஆர்டரில் தோனி 2 ரன்களில் கேட்ச் ஆனார். தோல்விக்கு தோனி தான் காரணம் என்று சொல்லமுடியாது. ஆனால், தோல்விக்கு அவரும் ஒரு காரணம் எனலாம்.
இதனால், ரசிகர்கள் சற்று அதிருப்தியில் இருந்தனர். அப்போட்டியில், இந்தியா பீல்டிங் செய்துக் கொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர் தேசியக் கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி வந்து தோனியின் கால்களில் விழுந்தார். அப்போது, தேசியக் கொடி கீழே விழச் சென்றது. சட்டென்று தேசியக் கொடியை பற்றிய தோனி, அது கீழே விழாமல் தடுத்தார்.
காலில் விழுந்த ரசிகரை தூக்காமல், கீழே சரிந்த தேசியக் கொடியை ஏந்திப் பிடித்த தோனிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது அவரது நாட்டுப்பற்றை காட்டுவதாக ரசிகர்கள் சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கிரிக்கெட் வீரரான தோனி, இந்திய ராணுவத்தில் சிறப்பு பதவியில் (Lieutenant Colonel) இருப்பது குறிப்பிடத்தக்கது.