வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2- 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 4வது போட்டி நாளை புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களுக்கு தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
அடித்து நொறுக்கும் திலக் வர்மா
இந்நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியில் டாப் ஆடரில் உள்ள சுப்மன் கில், இஷான் கிசான், சஞ்சு சாம்சன் போன்ற முன்னணி வீரர்கள் பேட்டிங்கில் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால், அறிமுக தொடரில் விளையாடி வரும் இளம் வீரரான திலக் வர்மா 39, 51 என முதல் இரண்டு போட்டிகளிலும் அதிகபட்ச ஸ்கோர் அடித்து வெற்றிக்கு போராடினார். இதேபோல், 3வது போட்டியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு 49* ரன்கள் அடித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் 3 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சூரியகுமார் சாதனையை சமன் செய்தார். மேலும் 20 வயதில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் முறியடுத்தார். அவரை இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையில் ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என குரல் வலுத்து வருகின்றது. அவர் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தவிர அவர் இடது கை பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார்.
புகழும் முன்னாள் தேர்வுக் குழு தலைவர்
இந்நிலையில், திலக் வர்மா ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவன் பாணியில் விளையாடுவதால் தாராளமாக உலகக் கோப்பையில் தேர்வு செய்யலாம் என முன்னாள் தேர்வுகுழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிந்துள்ளார்.
தனது மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மா குறித்து அவர் பேசுகையில், “ஐதராபாத் அணிக்காக அவருடைய லிஸ்ட் ஏ ரெக்கார்டை பாருங்கள். அவர் 25 லிஸ்ட் ஏ போட்டிகளில் 55 என்ற சராசரியை வைத்துள்ளார். அதில் 5 சதங்கள் 5 அரை சதங்கள் அடங்கும். அப்படியானால் அவர் தாம் அடிக்கும் 50% அரை சதங்களை சதங்களாக மாற்றுகிறார். அத்துடன் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டும் இருக்கிறது.
இந்த சமயத்தில் நாம் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபிட்டாக இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவர் காயத்தால் விலகும் பட்சத்தில் தற்போதைய சூழ்நிலையில் திலக் வர்மா தான் அந்த இடத்திற்கு சரியானவராக இருக்கிறார். ஏனெனில் சுழல் மற்றும் வேகம் ஆகிய 2 வகையான பந்துகளையும் சிறப்பாக எதிர்கொள்ளும் அவரிடம் தேவையான சமயத்தில் கியரை மாற்றி அதிரடியாக விளையாடும் திறமையும் இருக்கிறது. அவை அனைத்தையும் விட தற்போது நமக்கு டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இல்லை.
எனவே, இது போன்ற அம்சங்கள் அவருக்கு சாதகமாக செல்கிறது. மேலும் அவரால் மிகவும் எளிதாக சூழ்நிலைக்கேற்றார் போல் உட்பட்டு விளையாட முடிகிறது. குறிப்பாக நிலைமையை புரிந்து கொண்டு ஸ்ட்ரைக்கை மாற்றும் அவர் ரன்கள் எடுப்பதை நிறுத்தாமல் நங்கூரமாகவும் விளையாடுகிறார். குறிப்பாக அவர் மைக்கேல் பெவன் போன்றவராக செயல்படுகிறார்.
மேலும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் அவருடைய பேட்டிங் சராசரி 55 – 60 என்ற அளவில் இருக்கிறது. எனவே ஸ்ரேயாஸ் ஐயர் விலகினால் அவர் இந்திய அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.
திலக் வர்மா 25 உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் 1236 ரன்களை 56.18 என்ற சராசரியிலும் 101.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.