worldcup | england vs afghanistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் வரலாற்றுச் சாதனை படைத்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 80 (57) ரன்களும், இக்ரம் 58 (66) ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஜாஸ் பட்லர் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் ஹாரி ப்ரூக் 66 ரன்கள் எடுத்தார். வெறும் 40.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜிப் உர் ரகுமான் மற்றும் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், முகமது நபி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இந்த அசத்தல் வெற்றியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது.
இந்நிலையில், இந்தப் போட்டிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் வீரர் முஜிப் உர் ரகுமானை சிறுவன் ஒருவன் கட்டிப்பிடித்து அழும் காட்சி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் சுழல் ஜாலம் செய்த முஜிப் உர் ரகுமான் ஜோ ரூட், அரைசதம் அடித்த ஹாரி புரூக் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும், சிறப்பான பேட்டிங்கையும் வெளிப்படுத்திய அவர் 16 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 28 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
தனது ஆட்ட நாயகன் விருதை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்க விரும்புவதாக தெரிவித்தார். முன்னதாக, மைதானத்தில் இருந்த சிறுவன் ஒருவன் முஜிப் உர் ரகுமானை கட்டியணைத்து தேம்பி தேம்பி அழுதார். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pictures of the day I would like to dedicate my man of the match award to the earthquakes victims and their families in Afghanistan. pic.twitter.com/VraFd8MZQA
— Muj R 88 (@Mujeeb_R88) October 15, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.